24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி திறந்து வைத்தார்
திருப்பூரில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி திறந்து வைத்தார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) கீதா பிரியா, தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், தேர்தல் தாசில்தார் முருகதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அரசு மற்றும் அனுமதி பெறாமல் தனியார் சுவர்களில் செய்யப்பட்டுள்ள கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களை அகற்றிக்கொள்ள வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடித்து சிறந்த முறையில் தேர்தல் நடத்த ஒத்துழைக்க வேண்டும்.
தேர்தல் கட்டுப்பாட்டு அறை புதிதாக திறக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும். தேர்தல் குறித்த விவரங்களை அறிய பொதுமக்கள் 1800 425 6989 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம். மேலும் 0421 2971204 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தேர்தல் குறித்த விவரங்களை பெறலாம். பொதுமக்கள் அளிக்கும் புகார்களை உடனுக்குடன் பதிவு செய்து விசாரணைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு வாக்காளர்களுக்கு எழும் சந்தேகங்களையும், கோரிக்கைகளையும், கருத்துகளையும், புகார்களையும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story