மீனாட்சி அம்மன் தேரோட்டத்தன்று வாக்குப்பதிவு: மதுரையில் தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் அனைத்துக்கட்சியினர் கலெக்டரிடம் மனு


மீனாட்சி அம்மன் தேரோட்டத்தன்று வாக்குப்பதிவு: மதுரையில் தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் அனைத்துக்கட்சியினர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 11 March 2019 10:00 PM GMT (Updated: 11 March 2019 10:12 PM GMT)

மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருப்பதால், மதுரையில் தேர்தலை மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டு அனைத்துக்கட்சியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மதுரை,

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகராட்சி கமிஷனர் விசாகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் ரமேஷ் பாபு, செல்வம், தி.மு.க. சார்பில் பழனிசாமி, பா.ஜ.க. சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சசிராமன், மணிகண்டன், காங்கிரஸ் கட்சியின் மணிகண்டன், தே,மு.தி.க. ராமு, காமாட்சி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாயாண்டி, ராதா, இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் கவுன்சிலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் குறித்து கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆகியோர் விளக்கி பேசினர். பின்னர் பேசிய அரசியல் கட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஒருமித்த குரலில் மதுரையில் மீனாட்சி அம்மன் தேரோட்டத்தன்று வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே தேர்தல் தேதியை வேறு நாளுக்கு மாற்றி அமைக்க வேண்டும் என்று பேசினர். பின்னர் அவர்கள் இதுதொடர்பாக மனு ஒன்றையும் எழுதி, அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கையெழுத்து போட்டு கலெக்டரிடம் வழங்கினர்.

கூட்டத்திற்கு பின்னர் கலெக்டர் நடராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அந்தந்த மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை குறித்த தகவலை தெரிவிக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் இருந்து கடிதம் வந்திருந்தது. இந்த கடிதத்திற்கு இந்து அறநிலையத்துறையிடம் இருந்து பதில் பெற்று, மதுரை மாவட்டத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தன்று, அதாவது ஏப்ரல் மாதம் 19-ந் தேதி உள்ளூர் விடுமுறை என்று தெரிவித்து இருந்தோம்.

இந்தநிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேரோட்டத்தன்று தேர்தல் நடைபெறுவதால் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கொடுத்த மனு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

தேரோட்டத்தன்று தேர்தல் நடைபெறுமா என்று கேட்டால், நான் பீகாரில் தேர்தல் பார்வையாளராக இருந்த போது திருவிழாவிற்காக ஓட்டுப்பதிவு நேரம் மாற்றி அமைக்கப்பட்டு தேர்தல் நடந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருவிழாவின் போது சட்ட விதிகளை பின்பற்றி தேர்தலை நடத்த முடியுமா? என்ற கேள்விக்கு, “எங்களை பொறுத்தவரை அறிவித்த தேதியில் தேர்தலை நடத்த வேண்டும்” என்று கலெக்டர் தெரிவித்தார்.

முன்னதாக கூட்டத்தில் தேரோட்டத்தன்று தேர்தல் நடைபெறுவதால் வாக்குப்பதிவு நேரத்தை மாற்றி அமைப்பது குறித்தும், பாதுகாப்புக்கு கூடுதல் துணை ராணுவத்தினரை அழைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்டு மதுரை, விருதுநகர், தேனி ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகள் வருகின்றன. எனவே இந்த 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் சித்திரை திருவிழாவிற்கு ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களும் வருவார்கள் என்பதால் அந்த மாவட்டத்திற்குடப்பட்ட தேர்தல் தேதியையும் மாற்றி அமைக்க வேண்டும் என்று கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தி பேசினர். 

Next Story