தேர்தல் விதிமுறையை மீறியதாக நெல்லை பிரஸ் கிளப் கூட்ட அரங்கிற்கு ‘சீல்’ வைப்பு
தேர்தல் விதிமுறையை மீறியதாக நெல்லை பிரஸ் கிளப் கூட்ட அரங்கிற்கு நேற்று ‘சீல்’ வைக்கப்பட்டது.
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நெல்லை பிரஸ் கிளப் உள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் கூட்ட அரங்கு இருக்கிறது. நேற்று அங்கு தேர்தல் விதிமுறையை மீறும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய்தத், செயல் தலைவர்கள் வசந்தகுமார் எம்.எல்.ஏ., விஷ்ணுபிரசாத் ஆகியோர் பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் வந்தது. இதனால் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சியினர் இதுபோல் இங்கு வந்து பேட்டி அளிக்க வாய்ப்பு உள்ளதாகவும், எனவே, நெல்லை பிரஸ் கிளப் கூட்ட அரங்கிற்கு நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை ‘சீல்’ வைத்து, அந்த சாவியை கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (பொது) ஒப்படைக்குமாறு, பாளையங்கோட்டை தாசில்தாருக்கு நெல்லை நாடாளுமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை தாசில்தார் கனகராஜ் தலைமையில் அதிகாரிகள் பிரஸ் கிளப்பிற்கு வந்து கூட்ட அரங்கிற்கு ‘சீல்’ வைத்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி தலைவர்களை பேட்டி அளிக்க அனுமதித்தது தொடர்பாக ஏன் பிரஸ் கிளப் கீழ்தளத்தையும் மூடி சீல் வைக்கக்கூடாது? என்பது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் உதவி அலுவலர், பிரஸ் கிளப் தலைவர், செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
Related Tags :
Next Story