வாகனங்களில் செல்வோர் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பரிசு பொருட்கள் வைத்து இருந்தால் பறிமுதல் தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி பேச்சு
வாகனங்களில் செல்வோர் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பரிசு பொருட்கள் வைத்து இருந்தால் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை செயல்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, மாநகராட்சி ஆணையாளர் வி.பி.ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து உள்ளன. இந்திய தேர்தல் ஆணையம், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலும், சாலையோர பகுதிகளிலும் விளம்பர பதாகைகள் உள்ளிட்ட கட்சி சார்ந்த விளம்பர பணிகளை ஒருபோதும் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது. கிராமப்பகுதிகளில் தனியார் இடங்களில் உரிமையானவரின் அனுமதியுடன் விண்ணப்பித்து அரசின் அனுமதி பெற்று விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள், சுவர் எழுத்துக்கள் ஆகிய விளம்பர பணிகளை மேற்கொள்ளலாம்.
மேலும், வேட்பாளர்கள் நடைபெற உள்ள தேர்தலில் அதிகபட்சமாக ரூ.70 லட்சம் வரை தேர்தல் தொடர்பான பணிகளுக்கு செலவினம் மேற்கொள்ளலாம். நட்சத்திர பேச்சாளர்கள் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அவர்கள் சொந்த செலவுக்கு பயன்படுத்தலாம். அதற்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். தேர்தல் தொடர்பாக புகார்கள் ஏதேனும் வரும்பட்சத்தில் பறக்குபடை அலுவலர்கள் 15 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுப்பர்.
பரிசு பொருட்கள்நிலையான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபடுவோர்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்பவர்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா என்பது ஆய்வு செய்யபடும். ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பரிசு பொருட்கள் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும்.
மேலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் மாவட்ட கருவூல அலுவலர், மாவட்ட அளவிலான செலவின அலுவலர்கள் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
இந்த குழுவினர் அரசியல் கட்சிகளை சாராத தனிநபர் ஒருவர் அதிக அளவில் பணம் அல்லது பரிசுபொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தால், ஆய்வு செய்து உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தால் பறிமுதல் செய்யவார்கள். தேர்தலில் போட்டியிடுபவர்கள் இதற்கென தனியாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும். வாக்குப்பதிவு நாளில் இருந்து 48 மணிநேரத்துக்கு முன்பே தேர்தல் பிரசார பணிகளை முடிக்க வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சீட்டுகளுடன் ஆதார் கார்டு, பான் கார்டு, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், ஓய்வூதிய ஆவணங்கள் உள்ளிட்ட 11-ல் ஏதேனும் ஒரு ஆவணங்களை வைக்க அறிவுரை வழங்கி உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த பத்திரத்தில் அனைத்து விவரங்களும் தெரிவித்திருக்க வேண்டும். வேட்புமனுவில் அனைத்து விவரங்களும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஏதேனும் விவரங்கள் பூர்த்தி செய்யாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவிப்பார்கள். அதற்கு பின்னரும் பூர்த்தி செய்யாத பட்சத்தில் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.
ஒரு நபர்மீது குற்றவியல் வழக்குகள் இருக்கும்பட்சத்தில் அதனையும் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். குற்றவியல் வழக்குகள் இருக்கும் நபர்கள் 3 முறை நாளிதழில் விளம்பரம் செய்ய வேண்டும் எனவும், ஊடகத்திலும் விளம்பரம் செய்ய வேண்டும் எனவும், கட்சி மூலமும் 3 முறை நாளிதழில் விளம்பரம் செய்ய வேண்டும் எனவும், ஊடகத்திலும் விளம்பரம் செய்ய வேண்டும். இது ஏற்கனவே கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சாய்வு தளம் வசதிகள், பிரெய்லி மூலம் வடிவமைக்கப்பட்ட வாக்குச்சீட்டு உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகிறது. தனியார் இடங்களில் வைக்கப்படும் சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள் குறித்த தகவல்களை 3 நாட்களுக்கு முன் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அல்லது தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும். இந்த தேர்தலில் வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட உள்ளது. எனவே வேட்பாளர்களின் புகைப்படம் மற்றும் கட்சி சின்னத்தை பார்த்து வாக்களிக்க முடியும்.
இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன், உதவி கலெக்டர்(பயிற்சி) அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி மற்றும் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், அ.தி.மு.க. சந்தனம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மாநகர செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் இக்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story