ஏர்வாடி அருகே வாழைத்தார் அறுவடை பணிகள் மும்முரம் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனை


ஏர்வாடி அருகே வாழைத்தார் அறுவடை பணிகள் மும்முரம் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 12 March 2019 3:00 AM IST (Updated: 12 March 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடி அருகே வாழைத்தார் அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. போதிய விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஏர்வாடி,

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மாவடி, மலையடிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஏத்தன், ரசகதலி, செந்தொழுவன், நாடு உள்ளிட்ட வாழை ரகங்கள் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் வாழைத்தார்களுக்கு கேரள சந்தைகளில் தனி கிராக்கி உள்ளது. மேலும் இங்கு விளையும் ஏத்தன் ரக வாழைத்தார்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்நிலையில் கடந்த மாதம் முதல் வாழைத்தார்கள் அறுவடை செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த வாழைத்தார்களை வியாபாரிகளே நேரிடையாக வந்து எடைபோட்டு வாங்கி செல்கின்றனர். முதலில் வாழைத்தார்கள் 1 கிலோ ரூ.45க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை 1 கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் வாழைத்தார்களின் விலை கிலோ ரூ.20 குறைந்துள்ளது. இதனால் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு வாழைத்தார் உற்பத்தி செய்ய ரூ.250 வரை செலவாகிறது. ஆனால் செலவழித்த விலையை விட குறைவான விலைக்கே வாழைத்தார்கள் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் பெரிதும் வேதனையடைந்துள்ளனர்.

மேலும் தமிழக அரசே வாழைத்தார்களுக்கு விலை நிர்ணயம் செய்து, நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், வாழைத்தார் சந்தை அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story