‘வாடகை தாய் மூலம் பேரக்குழந்தையை பெற அனுமதிக்க வேண்டும்’ வயதான தம்பதி ஐகோர்ட்டில் மனு


‘வாடகை தாய் மூலம் பேரக்குழந்தையை பெற அனுமதிக்க வேண்டும்’ வயதான தம்பதி ஐகோர்ட்டில் மனு
x
தினத்தந்தி 12 March 2019 4:06 AM IST (Updated: 12 March 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

உயிரிழக்கும் முன் மகனிடம் சேகரிக்கப்பட்ட விந்தணுவை பயன்படுத்தி வாடகை தாய் மூலம் பேரக்குழந்தையை பெற அனுமதிக்க வேண்டும் என வயதான தம்பதி மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

மும்பை,

கர்நாடக மாநிலம் கல்புர்கி பகுதியில் ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர்(வயது70) மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்களது ஒரே மகனுக்கு கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமணம் நடந்து சில ஆண்டுகள் ஆன பிறகும் அவருக்கு குழந்தை இல்லை. எனவே அவர், மனைவி சம்மதத்துடன் வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றெடுக்க விரும்பினார்.

இதற்காக சோலாப்பூரில் உள்ள மகப்பேறு மையத்தில் அவரின் விந்தணு மற்றும் மனைவியின் கருமுட்டை சேகரித்து வைக்கப்பட்டு இருந்தது.

மகப்பேறு மையம் வாடகைத்தாய் மூலம் அந்த தம்பதிக்கு குழந்தையை பெற்றெடுப்பதற்கான செயல்முறைகளில் ஈடுபட்டு வந்தது.

இந்தநிலையில் 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வரின் மகன் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது மனைவி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற விருப்பம் இல்லை என சோலாப்பூர் மகப்பேறு மையத்தில் கூறிவிட்டார்.

எனவே மகப்பேறு மையம் ஓய்வுபெற்ற பேராசிரியர் மகனுக்கு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்பதை நிறுத்தி வைத்தது.

இந்தநிலையில் ஓய்வு பெற்ற பேராசிரியர் மற்றும் அவரது மனைவி மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

27 வயதான எங்களது மருமகளுக்கு மறுமணம் செய்ய எல்லா உரிமைகளும் இருக்கிறது. அதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அவர் விதவையாகவே இருக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள எங்களது மகனின் விந்தணு, மருமகளின் கருமுட்டையை பயன்படுத்தி வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்து மகனின் ஆசையை நிறைவேற்ற கோர்ட்டு அனுமதி அளிக்க வேண்டும்.

அந்த குழந்தையால் மருமகளுக்கு எந்த பாதிப்பும் வராது என்பதை உறுதி அளிக்கிறோம். அந்த குழந்தையை நாங்கள் பத்திரமாக பார்த்து கொள்வோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு வருகிற 14-ந்தேதி(நாளை மறுநாள்) விசாரணைக்கு வருகிறது.

Next Story