மாணவிகளின் மனதில் இடம் பிடிக்க அரசு பள்ளி மாணவர்கள் பயங்கர மோதல் - பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
மாணவிகளின் மனதில் இடம் பிடிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
நல்லூர்,
திருப்பூர்-காங்கேயம் ரோடு விஜயாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதே போல் திருப்பூர் பழைய பஸ் நிலையம் மார்க்கெட் அருகே க.சுப்பிரமணியம் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி (கே.எஸ்.சி.) உள்ளது. இந்த 2 பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு இடையே மாணவிகளின் மனதில் இடம் பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த மாணவர்கள் கோஷ்டிகளாக பிரிந்து மோதிக்கொள்கிறார்கள். அப்போது ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கே.எஸ்.சி. பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் 20 பேர் கத்தி, திருப்புளி ஆகிய ஆயுதங்களுடன் விஜயாபுரம் அரசு பள்ளிக்கு சென்றனர். இதையறிந்த விஜயாபுரம் பள்ளி மாணவர்களும், பள்ளியை விட்டு வெளியே வந்தனர். இதையடுத்து இரண்டு பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். அப்போது ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
இதனால் அந்த பகுதியே போர்க்களம்போல் ஆனது. இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து போலீசில் ஒப்படைக்க அங்கு சென்றனர். இதனால் பயந்துபோன மாணவர்கள் ஒரு சிலர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது 14 மாணவர்கள் மட்டுமே பொதுமக்களின் பிடியில் சிக்கினார்கள். அவர்கள் அனைவரையும் திருப்பூர் ஊரக போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அந்த மாணவர்களின் பெற்றோரை போலீஸ் நிலையம் வரவழைத்து, பெற்றோர் முன்னிலையில் மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அந்த மாணவர்களிடம் இருந்து கத்தி மற்றும் திருப்புளி போன்ற ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story