நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: சுவர் விளம்பரங்கள் அழிப்பு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களுக்கு பூட்டு


நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: சுவர் விளம்பரங்கள் அழிப்பு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களுக்கு பூட்டு
x
தினத்தந்தி 12 March 2019 4:37 AM IST (Updated: 12 March 2019 4:37 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து உள்ளதை தொடர்ந்து நாமக்கல்லில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களுக்கும் பூட்டு போடப்பட்டு உள்ளது.

நாமக்கல்,

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து உள்ளன. குறிப்பாக நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சுவர் விளம்பரங்களுக்கு தடை விதித்து உள்ள தேர்தல் ஆணையம், கிராம புறங்களில் வீட்டு உரிமையாளரின் அனுமதி பெற்று சுவர் விளம்பரங்களை எழுத வேண்டும் என அறிவித்து உள்ளது.

இதையொட்டி நாமக்கல் நகரில் அரசு கட்டிடங்கள் மற்றும் மேம்பாலங்களில் எழுதப்பட்டு இருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் நகராட்சி பணியாளர்கள் மூலம் அழிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சுவரொட்டிகளும் அகற்றப்பட்டு வருகின்றன.

இதேபோல் நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம், ராசிபுரம், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் பயன்படுத்தும் அரசு வாகனங்களை ஒப்படைத்து விட்டனர். மேலும் சட்டமன்ற உறுப்பினருக்கான அரசு அலுவலகத்தையும் பூட்டி அதற்கான சாவியை சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலரிடம் ஒப்படைத்து விட்டனர்.

நாமக்கல் நகரை பொறுத்தவரையில் மோகனூர் சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் மறைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்களின் படங்களும் அகற்றப்பட்டு விட்டன. கொடி கம்பங்களை அரசியல் கட்சியினர் தாங்களே முன்வந்து அகற்றி கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

சேந்தமங்கலம் பேரூராட்சியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோ அறிவுறுத்தலின் பேரில், பேரூராட்சி இருக்கை எழுத்தர் தேவராஜன் மேற்பார்வையில் பணியாளர்கள் அந்த பணிகளை மேற்கொண்டனர்.

எருமப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி கட்சி பேனர்கள், கொடிகள் அகற்றப்பட்டன. கட்சி தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட்டது. சேந்தமங்கலம் உதவி தேர்தல் அலுவலர் துரை, தாசில்தார் செந்தில்குமார், மண்டல துணை தாசில்தார் வசந்தி, எருமப்பட்டி வருவாய் ஆய்வாளர் தமிழ்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் அழகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story