பா.ஜனதாவுக்கு ஓட்டு கிடைக்கும் என்பதால் புதுவையில் இலவச காப்பீட்டு திட்டத்தை கொண்டு வரவில்லை - சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
புதுவையில் பா.ஜனதாவுக்கு ஓட்டு கிடைத்து விடும் என்பதால் இலவச காப்பீட்டு திட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி கொண்டு வரவில்லை என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.
பாகூர்,
பாகூர் தொகுதி பா.ஜனதா கட்சி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் காட்டுக்குப்பத்தில் நடைபெற்றது. தொகுதி தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொகுதி பொதுச்செயலாளர் புவனசுந்தரம் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் தங்க.விக்ரமன், துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம், மாவட்ட தலைவர் சக்திதாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
பிரதமர் நரேந்திரமோடி வீடு இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் கல்வீடு திட்டம் கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் பிற மாநிலத்தில் ஒரு கோடி மக்கள் பயன் அடைந்துள்ளனர். ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி இந்த திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு வழங்கியும் செயல்படுத்தவில்லை.
ஏழை மக்கள் உயர் சிகிச்சை பெற இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் கொண்டு வந்தார். இந்த திட்டம் மூலம் சிறந்த மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற ரூ.5 லட்சம் வரை வழங்கப் படுகிறது. இந்த திட்டத்தை புதுச்சேரியில் செயல்படுத்தினால் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அனைவரும் பாரதீய ஜனதா கட்சிக்கு ஓட்டு போட்டுவிடுவார்கள் என்று நினைத்து இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி கொண்டு வராமல் இருட்டடிப்பு செய்துவிட்டார்.
சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளான இலவச அரிசி, சர்க்கரை இதுவரை வழங்கவில்லை. தண்ணீர் கட்டணம், வீட்டு வரி, மின்சார கட்டணம் ஆகியவற்றை இந்த அரசு பல மடங்கு உயர்த்தி உள்ளது. வாங்கும் சம்பளத்தில் ரூ.10 ஆயிரம் வரியாகவே கட்ட வேண்டிய சூழ்நிலையை காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் தொகுதி செயலாளர் சரவணன் நன்றி தெரிவித்தார். இதில் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story