சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி சாவு


சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி சாவு
x
தினத்தந்தி 12 March 2019 3:15 AM IST (Updated: 12 March 2019 4:53 AM IST)
t-max-icont-min-icon

சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில், வியாபாரி பரிதாபமாகச் செத்தார்.

வில்லியனூர்,

மடுகரை பெரிய காலனி ராம்ஜி நகரை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவருடைய மகன் ஜெகன் (வயது 34), வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

ஏம்பலம் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் ஜெகன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் ஜெகன் பரிதாபமாகச் செத்தார்.

இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வில்லியனூரை அடுத்த அரியூர் பாரதிநகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி சுலோசனா (வயது 51). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் சுலோசனா வெளியில் சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி வந்தார். அவர் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த சுலோசனா சம்பவ இடத்திலேயே செத்தார். இதுகுறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.

Next Story