ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம் மனைவியின் கள்ளக்காதலன் வெட்டிக்கொலை கணவர் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு


ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம் மனைவியின் கள்ளக்காதலன் வெட்டிக்கொலை கணவர் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 March 2019 4:00 AM IST (Updated: 12 March 2019 9:28 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் அருகே மனைவியின் கள்ளக்காதலனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த கணவர் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் பெரியகாலனி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 35). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்து வந்தார். இவரது மனைவி வனிதா (25). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

அதே பகுதியை சேர்ந்தவர் கணபதி (30). இவர் பாலாஜியின் உறவினர். அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று அனைவருடனும் சகஜமாக பழகி வந்தார். நாளடைவில் பாலாஜி வீட்டில் இல்லாதபோது வனிதாவுடன் நெருங்கி பழகினார். இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. பாலாஜி இல்லாத நேரத்தில் கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருந்து வந்தனர்.

இவர்களது கள்ளக்காதல் விவகாரம் பாலாஜிக்கு தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் வனிதா கணவருக்கு தெரியாமல் வெளியிடங்களுக்கு சென்று கணபதியுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த பாலாஜி, மனைவி வனிதாவை சரமாரியாக அடித்து உதைத்தார்.

இதுகுறித்து வனிதா மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்தனர். போலீசுக்கு பயந்து பாலாஜி சில நாட்கள் தலைமறைவாக இருந்தார். கணவர் தலைமறைவானதால் வனிதா, தனது குழந்தையை தாய் வீட்டில் விட்டுவிட்டு கள்ளக்காதலன் கணபதியுடன் ஊரை விட்டு சென்று விட்டார்.

மனைவியை பல இடங்களில் பாலாஜி தேடி வந்தார். இந்த நிலையில் வனிதா, கள்ளக்காதலன் கணபதியுடன் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த குண்டுப்பெரும்பேடு பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வருவது தெரியவந்தது.

இதையடுத்து பாலாஜி தனது கூட்டாளிகளுடன் நேற்று முன்தினம் இரவு குண்டுப்பெரும்பேடு பகுதிக்கு சென்று அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உள்ளே திடீரென புகுந்தார். அங்கு வனிதாவும், கணபதியும் உல்லாசமாக இருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்த பாலாஜி மற்றும் கூட்டாளிகள் அவர்களை சரமாரியாக கத்தியால் வெட்டினார்கள்.

இதில் கணபதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். வனிதா கை, கால்களில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடினார். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் பாலாஜி மற்றும் கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வனிதாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொலையுண்ட கணபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவான பாலாஜி, வனிதாவின் தம்பி அஜித் உள்பட 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story