கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா நடப்பதால் தேனி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் - அனைத்து கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தல்


கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா நடப்பதால் தேனி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் - அனைத்து கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 March 2019 4:00 AM IST (Updated: 12 March 2019 10:31 PM IST)
t-max-icont-min-icon

கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா நடக்க இருப்பதால், தேனி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று அனைத்து கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

தேனி,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அறிவிக்கும் வகையில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-

தேர்தல் அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் பொது நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே, ஒரு அரசியல் கட்சியினர் குறித்து விமர்சனங்கள் செய்வதாக இருந்தால் அக்கட்சியின் முந்தைய செயல்பாடுகள், கொள்கைகள், திட்டங்கள், பணிகள் குறித்து மட்டுமே இருக்க வேண்டும்.

கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், கட்சியின் தலைவர் கள், தொண்டர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ, பொது நடவடிக்கைகளுக்கு தொடர்பில்லாத விவரங்கள் பற்றியோ விமர்சிப்பதை தடுக்க வேண்டும். அரசியல் கட்சி, வேட்பாளர்கள் தாங்கள் நடத்த உத்தேசித்துள்ள கூட்டங்களின் நாள், நேரம், ஆகிய விவரங்களை உள்ளூர் போலீஸ் துறையினருக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்.

தேர்தலின் போது, கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கூட்டங்கள் நடத்துவதற்கும், ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் உரிய அலுவலரிடம் முன்அனுமதி அல்லது உரிமம் பெற வேண்டும். ஊர்வலம் நடத்த திட்டமிட்ட நாள், நேரம், ஊர்வலப்பாதை போன்றவற்றை இணையதளம் வாயிலாக பதிவு செய்து அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஊர்வலங்கள் நடத்தப்படும் போது கட்டாயமாக போக்குவரத்து விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை மதித்து நடக்க வேண்டும். 2 அல்லது அதற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் ஒரே இடத்தில் ஒரே நாளில், ஒரே நேரத்தில் ஊர்வலங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தால் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்தவர் கள் முன்கூட்டியே ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொண்டு மக்களுக்கு இடையூறு செய்யாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இரவு 10 மணிக்கு பிறகு கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தக்கூடாது. காலை 6 மணிக்கு முன்பும், இரவு 10 மணிக்கு பின்பும் ஒலிபெருக்கிகளை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது. ஒரு கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகள் மீது மற்ற கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டுவதோ, அகற்றுவதோ கூடாது.

குற்றப்பின்னணி உள்ள யாரையும் தேர்தல் பணிக்கு நியமிக்கக்கூடாது. வாக்காளர்கள் தவிர தேர்தல் ஆணையத்தால் உரிய அனுமதி பெறாதவர் எவரும் வாக்குச்சாவடிக்குள் செல்லக்கூடாது. வேட்பு மனு தாக்கலின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பாளர் பிரசாரத்தின் போது 10 வாகனங் களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பேசும்போது, ‘மதுரையில் சித்திரை திருவிழா நடக்கும் நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று, தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா மற்றும் கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா நடக்க உள்ளது. மக்கள் திரளாக கலந்துகொள்வார்கள். எனவே, தேனி நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்’ என்று கூறினர்.

அதற்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பதில் அளிக்கையில், ‘வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ந்தேதி நடக்கிறது. கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா ஏப்ரல் 19-ந்தேதி நடக்கிறது. வாக்குப்பதிவுக்கும், வழிபாட்டுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இருப்பினும், அரசியல் கட்சிகள் இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக கோரிக்கை மனுவை கொடுத்தால் அதை தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்படும்’ என்றார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்களும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Next Story