மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம், கலெக்டர் அலுவலகம் முற்றுகை - மாணவர் சங்கத்தினர் 51 பேர் கைது
மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர் சங்கத்தினர் 51 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளை மிரட்டி ஆபாச படம் எடுத்து, பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சமூக வலைத் தளங்களில் வெளியான வீடியோக்களில் பெண்களின் அலறல் சத்தம் பார்ப்பவர்களை குலைநடுங்க வைத்து உள்ளது.
இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட திருநாவுக்கரசு உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும், இந்திய மாணவர் சங்கத்தினர் (எஸ்.எப்.ஐ.) கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
ஆனால் அவர்கள் அறிவித்தபடி நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடத்த வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உள்ளே விடாமல் தடுத்த னர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை யடுத்து இந்திய மாணவர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதற்கு மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், பொள்ளாச்சியில் பாலியல் பலாத்கார விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது அரசியல் பாகுபாடு பார்க்காமல் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைந்து செல்ல வலியுறுத்தினர்.
ஆனால் அவர்கள் அதை கேட்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 5 மாணவிகள் உள்பட 51 பேரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்து, கோவையில் உள்ள தனியார் மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.
இதேபோல் கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள சட்டக்கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் போராட்டம் நடத்தினர்.
Related Tags :
Next Story