மாணவிகள், இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்த திருநாவுக்கரசுக்கு உடந்தையாக இருந்த தோழி யார்? போலீசார் தீவிர விசாரணை
மாணவிகள், இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தி சீரழித்த காதல் மன்னன் திருநாவுக்கரசுவுக்கு உடந்தையாக இருந்த தோழி யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் தலைவனாக செயல்பட்ட திருநாவுக்கரசு (வயது 27), எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். வசதியான குடும்பம், சொகுசு கார், பண்ணை தோட்டம் என ஆடம்பரமாக வாழ்ந்து வந்த இவர் கல்லூரியில் படிக்கும்போதே காதல் மன்னனாக வலம் வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவரின் தோழி மூலம் சில இளம்பெண்களிடம் பழக்கம் ஏற்பட்டது. கை நிறைய பணம், பார்ப்பதற்கு நடிகர் போன்ற அழகு தோற்றம், நுனி நாக்கில் சரளமாக ஆங்கிலம் பேசுவது போன்ற திறமைகளால் திருநாவுக்கரசு, மாணவிகள்- இளம்பெண்களை மிக எளிதாக மயக்கி காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். மேலும் பல இளம்பெண்களின் செல்போன் எண்ணை பெற அவர் தேர்வு செய்தது முகநூல் தான் (பேஸ்புக்).
அதுபோன்று அவரது நண்பரான சபரிராஜனும் தனது பேச்சுத்திறமையால் ஏராளமான இளம்பெண்களை மயக்கி, திருநாவுக்கரசுவின் சொகுசு காரில் சுற்றுலா மையங்களுக்கு அழைத்து சென்று உள்ளார். பின்னர் அங்குள்ள மறைவான இடத்துக்கு சென்று சில்மிஷத்தில் ஈடுபடும்போது அதை மறைந்து இருந்து திருநாவுக்கரசு உள்பட மற்ற 3 பேரும் வீடியோ எடுப்பார்கள்.
பின்னர் அந்த வீடியோவை வைத்து அந்த மாணவிகள் மற்றும் இளம்பெண்களை திருநாவுக்கரசு மிரட்டி தனது பண்ணை வீட்டுக்கு வரவழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார். இப்படித்தான் அவர் பல மாணவிகள், இளம்பெண்களை சீரழித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் கூறியதாவது:-
திருநாவுக்கரசு உள்பட 4 பேரால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்து உள்ளது. ஆனால் எத்தனை பேர் என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து தாராளமாக புகார் செய்யலாம். அவர்கள் விவரம் குறித்து ரகசியம் காக்கப்படும். திருநாவுக்கரசு இந்த செயலில் ஈடுபட அவருடன் படித்த தோழி ஒருவர் உடந்தையாக இருந்துள்ளார்.
அந்த பெண் மூலம்தான் அவர் ஏராளமான இளம்பெண்களின் செல்போன் எண்களை பெற்று உள்ளார். எனவே அந்த பெண் யார் என்பது குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்து உள்ளது. அதை வைத்து நாங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பொதுவாக மாணவிகள், பெண்கள் முகநூலை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். அதில் எக்காரணத்தை கொண்டும் தங்களின் செல்போன் எண்ணை குறிப்பிடக்கூடாது. அதுபோன்று தங்களின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்யக்கூடாது. முகநூல் பயன்படுத்துவது ஒவ்வொருவரின் விருப்பம். அதில் பெண்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்வதன் மூலம் சிலர் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
மேலும் முகநூலில் முன்பின் தெரியாத நபர்கள் யாராவது நண்பர்களாக சேர்க்க விருப்பம் தெரிவித்து இருந்தால் அவர்களின் விவரம் தெரிந்த பின்னர்தான் சேர்க்க வேண்டும். அத்துடன் முன்பின் தெரியாத நபர்களுக்கு புகைப்படமோ, வீடியோக்களோ அனுப்பி வைக்கக்கூடாது. யாராவது முகநூல் மூலம் புகைப்படம் அல்லது வீடியோக்களை அனுப்பி வையுங்கள் என்று தொந்தரவு கொடுத்தால் தாராளமாக புகார் செய்யலாம். அந்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story