மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சி


மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 12 March 2019 10:30 PM GMT (Updated: 12 March 2019 7:10 PM GMT)

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு இருப்புபாதை காவல் துறை சார்பில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு இருப்புபாதை காவல் துறையின் “காவலன்-எஸ்.ஓ.எஸ்“ என்ற செயலியை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது.

அதன் மூலம் பெண்கள் ரெயிலில் பயணம் செய்யும் போது அவர்களுக்கு இடையூறு ஏற்பட்டாலோ, பாலியல் தொல்லை நடந்தாலோ, மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டாலோ உடனடியாக மேற்குறிப்பிடப்பட்ட “ செயலி “ மூலம் தெரிவிக்கப்பட்டால் ரெயில்வே போலீசார் பெண் பயணிகள் இருக்கும் இடத்திற்கு சென்று குற்ற சம்பவத்தை தடுத்து நிறுத்துவார்கள் என்று அறிவுறுத்தப்பட்டது.

துண்டு பிரசுரங்கள்

மேலும் இருப்பு பாதை காவல் நிலையங்கள் ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும், ரெயில் படிகட்டுகளில் உட்கார்ந்து கொண்டே பயணம் செய்யும் போது தூங்கி விழுந்து விபத்தின் போது மரணம் ஏற்படுவது, ரெயில் தண்டவாளத்தை கவனமில்லாமல் கடக்கும் போது ஏற்படும் விபத்து மரணம், ரெயில் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் பயணிகளிடம் இருந்து செல்போன், நகைகள் உள்ளிட்டவற்றை திருடும் மர்ம நபர்களின் குற்ற செயல்கள் உள்ளிட்ட ரெயில் பயணத்தின் போது கவனிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ரெயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு பெண்கள் கல்லூரிக்கு ரெயில்வே போலீசார் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி கல்லூரி மாணவிகளுக்கு ரெயில் பயணத்தின் போது பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Next Story