கரூரில் பெண் என்ஜினீயர் உள்பட 3 பேரை திருமணம் செய்த மந்திரவாதி கைது


கரூரில் பெண் என்ஜினீயர் உள்பட 3 பேரை திருமணம் செய்த மந்திரவாதி கைது
x
தினத்தந்தி 13 March 2019 4:45 AM IST (Updated: 13 March 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் பெண் என்ஜினீயர் உள்பட 3 பெண்களை திருமணம் செய்த மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் பல பெண்களை ஏமாற்றினாரா என்று விசாரணை நடத்தப்பட்டது.

கரூர்,

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள நாராயணபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 31). மந்திரங்கள் கற்ற இவர், தும்பிவாடி அருகே உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக வேலை செய்து வந்தார். அப்போது கரூரை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒருவர், அந்த கோவிலுக்கு சாமி கும்பிட அடிக்கடி வந்து சென்றார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

அந்த பெண்ணை பாலாஜி திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் கரூரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் நடந்தது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் ஐ.பி.கோவில் தெருவை சேர்ந்த மகாலட்சுமி (46) என்ற பெண் தனது உறவினர்களுடன் வரவேற்பு நடைபெற்ற ஓட்டலுக்கு வந்து வரவேற்பு நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினார். அப்போது, எனது மகளின் வாழ்க்கையில் விளையாடி விட்டு, தற்போது மற்றொரு பெண்ணை திருமணம் செய்து விட்டாயே? என தகராறு செய்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் மகாலட்சுமி கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு எனது மகள் அபிராமியும், பாலாஜியும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், பாலாஜி ஏற்கனவே வேறொரு பெண்ணை திருமணம் செய்து இருந்தது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள், வேறுவழியில்லாமல் இருவரும் வாழ வேண்டும் என்பதற்காக அனைத்தும் செய்து கொடுத்தோம். அப்போது பாலாஜி, தோஷம் நீங்க பூஜை-பரிகாரம் செய்வது என மாந்திரீகத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், எனது மகளிடம் வரதட்சணை கேட்டும், சுடுகாட்டில் மாந்திரீக வேலைகளுக்கு உதவியாக இருக்க சொல்லியும் பாலாஜி கொடுமைப்படுத்தினார். தற்போது இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதேபோல, அவர் பல பெண்களை வசியம் செய்து ஏமாற்றி இருக்கலாம். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பின்னர், இதுகுறித்து கரூர் டவுன் போலீசில் மகாலட்சுமி புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். மனைவிக்கு தெரியாமல் திருமணம் செய்தது, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மகாலட்சுமி கூறியபடி, அவர் மேலும் பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றி உள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கரூர் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். 

Next Story