பூதப்பாண்டி அருகே டெம்போ உரிமையாளர் குளத்தில் மூழ்கி சாவு மீன் பிடித்த போது பரிதாபம்


பூதப்பாண்டி அருகே டெம்போ உரிமையாளர் குளத்தில் மூழ்கி சாவு மீன் பிடித்த போது பரிதாபம்
x
தினத்தந்தி 13 March 2019 4:15 AM IST (Updated: 13 March 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

பூதப்பாண்டி அருகே நள்ளிரவில் கோவில் தெப்பக்குளத்தில் நண்பருடன் மீன்பிடித்த டெம்போ உரிமையாளர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

பூதப்பாண்டி,

பூதப்பாண்டி அருகே உள்ள புதுக்கிராமம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின்ஜோசப் (வயது 46). இவர் சொந்தமாக டெம்போ வைத்து, ஓட்டி வந்தார். இவருக்கு செல்வி(35) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஜஸ்டின் ஜோசப்புக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

அழகியபாண்டியபுரத்தில் பெருமாள் கோவிலும், அதன் முன்பகுதியில் தெப்பக்குளமும் உள்ளது. இந்த குளத்து தண்ணீரை கோவிலின் தேவைக்கு பயன்படுத்தி வந்தனர். மேலும், குளத்தில் யாரும் மீன்பிடிக்க அனுமதி கிடையாது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜஸ்டின்ஜோசப், நண்பர் காட்டாத்துறையை சேர்ந்த ஸ்டார்லின் என்பவருடன் சேர்ந்து அழகியபாண்டியபுரம் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குளத்தில் மீன் பிடித்ததை கண்டு சத்தம் போட்டனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த ஸ்டார்லின் தனது மோட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். ஆனால், ஜஸ்டின் ஜோசப் அங்கிருந்து செல்ல முயன்ற போது, எதிர் பாராத விதமாக தெப்பக்குளத்தில் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இது ஸ்டார்லினுக்கு தெரியாது.

இதனால், ஸ்டார்லின், எட்டாமடை பகுதியை சேர்ந்த ஜெஸ்டின் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அதைதொடர்ந்து ஜெஸ்டின், ஜஸ்டின் ஜோசப் குடும்பத்துக்கும் மற்றும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், நேற்று அதிகாலை தெப்பக்குளத்துக்கு சென்று ஜஸ்டின் ஜோசப்பை அவர் தேடினார். அப்போது தான் ஜஸ்டின் ஜோசப் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் அங்கையர் கன்னி, சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜஸ்டின்ஜோசப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story