கணித தேர்வு சரியாக எழுதாததால் குளத்தில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


கணித தேர்வு சரியாக எழுதாததால் குளத்தில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 13 March 2019 4:45 AM IST (Updated: 13 March 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

கணித தேர்வு சரியாக எழுதாததால் குளத்தில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாள். அவள் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

குடகு,

கணித தேர்வு சரியாக எழுதாததால் குளத்தில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாள்.இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா ஒசகேரி கிராமத்தை சேர்ந்தவள் ஜஸ்மிதா (வயது 14). இவள் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். தற்போது பள்ளியில் தேர்வு நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த கணித தேர்வை ஜஸ்மிதா சரியாக எழுதவில்லை என தெரிகிறது. இதனால் அவள் மனமுடைந்து காணப்பட்டாள்.

மேலும் கணித தேர்வில் தேர்ச்சி பெற மாட்டோம் என்றும், இதனால் பெற்றோருக்கு அவமானம் ஏற்பட்டுவிடுமோ என்று அவள் பயந்து இருந்தாள். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு செல்வதாக ஜஸ்மிதா வீட்டில் கூறி சென்றாள்.

ஆனால் அவள் பள்ளிக்கு செல்லாமல் அந்தப்பகுதியில் உள்ள காபி தோட்டத்துக்கு சென்றாள். அவள் அங்குள்ள ஒரு குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டாள். இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற ஜஸ்மிதா மாலை வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த அவளுடைய பெற்றோர், ஜஸ்மிதாவை பல இடங்களில் தேடினார்கள்.

அப்போது காபி தோட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் ஜஸ்மிதாவின் செருப்பு மிதந்தது. மேலும் குளத்தின் கரையில் அவளுடைய பை இருந்தது. இதனால் அவள் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் மடிகேரி புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார், குளத்தில் கிடந்த ஜஸ்மிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மடிகேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, ஜஸ்மிதாவின் கைப்பட எழுதிய ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

அந்த கடிதத்தில், அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்கள் என்னை நன்றாக பார்த்துக்கொண்டீர்கள். நான் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைத்தீர்கள். ஆனால் எனக்கு சரியாக படிப்பு வரவில்லை. கணித தேர்வை நான் சரியாக எழுதவில்லை. அதில் நான் தோல்வி அடைந்து விடுவேன். இதனால் உங்களுக்கு அவமானம் ஏற்படும். இதனால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன் என்று உருக்கமாக எழுதியிருந்தாள்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கணித தேர்வு சரியாக எழுதாததால் ஜஸ்மிதா குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மடிகேரி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story