‘மோடி ஜாக்கெட்’ விற்பனை வீழ்ச்சி ஆயத்த ஆடை வியாபாரிகள் வேதனை


‘மோடி ஜாக்கெட்’ விற்பனை வீழ்ச்சி ஆயத்த ஆடை வியாபாரிகள் வேதனை
x
தினத்தந்தி 13 March 2019 3:19 AM IST (Updated: 13 March 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

அவுரங்காபாத்தில் ‘மோடி ஜாக்கெட்’டின் விற்பனை வீழ்ச்சி அடைந்து விட்டதாக ஆயத்த ஆடை வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

மும்பை,

நாடு முழுவதும் கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இதனால் அவர் சட்டையின் மேல் அணியும் ஆப்-ஜாக்கெட் உடையும் பிரபலமானது. அது மோடி ஜாக்கெட் என்ற பெயரும் பெற தொடங்கியது. தேர்தலின் போது அந்த ஆடை அதிக அளவில் விற்பனையானது.

தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதை தொடர்ந்து மோடி ஜாக்கெட் விற்பனையும் கொடிகட்டி பறந்தது.

ஆனால் சமீப காலமாக மோடி ஜாக்கெட்டின் விற்பனை மந்தமாகிவிட்டதாகவும், மக்களுக்கு அதன்மீதான ஆர்வம் குறைந்துவிட்டதாகவும் மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த ஆயத்த ஆடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், “கடந்த நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் எனது கடையில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 35 மோடி ஜாக்கெட்டுகள் விற்பனை ஆனது. அதன்பின் விற்பனை எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விட்டது. தற்போது வாரத்திற்கு ஒன்றுதான் விற்பனை ஆகிறது” என்றார்.

மற்றொரு வியாபாரி தெரிவிக்கையில், “ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் வறட்சி போன்ற காரணங்களால் மோடி ஜாக்கெட் மட்டுமல்லாமல், அனைத்து வகையான ஆடைகளின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

பல்வேறு பகுதியை சேர்ந்த வியாபாரிகளும் கிட்டத்தட்ட இதே கருத்தை தெரிவித்தனர்.

துணி வியாபாரி ராஜேந்திர பவாஸ்கர் என்பவர் கூறுகையில், “நான் மற்ற ஆடைகளுடன் சேர்த்து மோடி ஜாக்கெட்டுகளை விற்பனைக்காக வாங்கி குவித்து வைத்துள்ளேன். இதற்காக அதிக முதலீடு செய்தேன். ஆனால் கடந்த 1 ஆண்டில் வெறும் 10 ஜாக்கெட்டுகள் கூட விற்கவில்லை. விற்பனையாகாமல் மோடி ஜாக்கெட்டுகள் அதிகளவில் தேங்கி கிடப்பதால் நான் பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன்” என்றார்.

Next Story