கொட்டாம்பட்டியில் குரங்குகள் அட்டகாசம்


கொட்டாம்பட்டியில் குரங்குகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 12 March 2019 9:45 PM GMT (Updated: 12 March 2019 10:31 PM GMT)

கொட்டாம்பட்டியில் வீடு, கடைகளில் புகுந்து பொருட்களை எடுப்பது, சேதப்படுத்துவது என குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன.

கொட்டாம்பட்டி, 

கொட்டாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள வலைச்சேரிபட்டி, திருச்சுனை உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில மாதங்களாகவே ஊருக்குள் புகுந்துள்ள குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. வறட்சி காரணமாக வனப்பகுதியிலும், மலைப்பாங்கான இடங்களிலும் தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காததால் குரங்குகள் தற்போது ஊருக்குள் புகுந்து வருகின்றன. குறிப்பாக கொட்டாம்பட்டியில் அதிக அளவு குரங்குகள் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கூண்டு வைத்து பிடிக்கப்படும் குரங்குகளை இரவு நேரத்தில் கொட்டாம்பட்டி மலை பகுதியில் விட்டு செல்வதால், அவை பக்கத்து கிராமங்களிலும் உணவு தேடி கூட்டம், கூட்டமாக படையெடுத்து வருகின்றன. தென்னை, மாமரம், கொய்யா உள்ளிட்ட மரங்களை சூழ்ந்து கொண்டு பெரும் சேதத்தை உண்டாக்குகின்றன.

வீடு,கடைகளில் யாரும் இல்லாத நேரங்களில் குரங்குகள் ஓட்டை பிரித்து இறங்கி உணவுப்பொருட்களை எடுத்துச் செல்வதுடன், தண்ணீர் பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் அச்சத்துடன் பொதுமக்கள் இருந்து வருகின்றனர். மேலும் கொட்டாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, ஒன்றிய அலுவலகம் உள்ளிட்டவற்றில் சாதாரணமாக வலம் வரும் குரங்குகள், சத்துணவு கூடத்திற்குள்ளும் புகுந்து உணவுப்பொருட்களை எடுத்து வருகின்றன. விரட்டும் சமையலர்களையும் குரங்குகள் அச்சுறுத்து வருகின்றன. மதிய உணவு வேளையில் மாணவர்களை மிரட்டி உணவை குரங்குகள் பறித்து வரும் சம்பவமும் நடந்து வருகிறது.

எனவே கொட்டாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story