மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை வேலூர் கோர்ட்டு தீர்ப்பு


மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை வேலூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 12 March 2019 10:00 PM GMT (Updated: 12 March 2019 10:31 PM GMT)

பள்ளி மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட கலெக்டருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

வேலூர்,

ஆலங்காயம் நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 34), கட்டிட தொழிலாளி. இவர் தன்னுடைய நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த நண்பரின் 17 வயதுடைய மகள் மீது சரவணன் ஆசை கொண்டார். பிளஸ்-2 படித்து வந்த அந்த பெண் 16.10.2017 அன்று பள்ளிக்கு சென்றபோது சரவணன் அவரை பெங்களூருவுக்கு கடத்தி சென்றார். அங்கு 4 நாட்கள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் மாணவியை திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே விட்டுவிட்டு சென்று விட்டார்.

இதுகுறித்து ஆலங்காயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

இந்த வழக்கு வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் லட்சுமிபிரியா ஆஜராகி வாதாடினார்.

நேற்று வழக்கை நீதிபதி செல்வம் விசாரித்து தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட சரவணன், மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும், 4 நாட்கள் மாணவியை சிறை வைத்ததற்காக ஓராண்டு தண்டனையும், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் என மொத்தம் 18 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு அபராதத் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும். அந்த தொகை மாணவிக்கு போதுமானதாக இல்லாததால் ரூ.4 லட்சம் இழப்பீடாக வழங்க மாநில அரசின் அங்கமான வேலூர் மாவட்ட கலெக்டருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து சரவணனை போலீசார் வேலூர் ஜெயிலுக்கு அழைத்துச் சென்றனர். 

Next Story