புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண் - திருப்பூரில் பரபரப்பு
புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால், திருப்பூரில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் காலேஜ் ரோடு நத்தக்காடு பகுதியை சேர்ந்தவர் கிரிஜா (வயது 55). இவருடைய கணவர் மாரிமுத்து(60). டீக்கடை தொழிலாளி.
இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மாரிமுத்துவுடன் 2 மகள்கள் வசித்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் மாரிமுத்து, கிரிஜாவின் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறு குறித்து மாரிமுத்து தனது 2 மகள்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள் நேற்று காலையில் தனது தாயார் வீட்டிற்கு சென்று, தகராறில் ஈடுபட்டதுடன் வீட்டையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கிரிஜா, தனது மகள்கள் மீது புகார் அளிப்பதற்காக நேற்று திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அவரிடம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்குமாறு போலீசார் கூறியதாக தெரிகிறது.
இந்தநிலையில், தான் கொடுத்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கிரிஜா, தான் பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த மகளிர் போலீசாரும், வடக்கு போலீசாரும் ஓடி வந்து கிரிஜாவை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். மேலும் குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து கிரிஜா மீது ஊற்றினார்கள்.
பின்னர் இதுதொடர்பாக புகார் அளிக்க போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்துக்கு கிரிஜா புறப்பட்டு சென்றார். இதுகுறித்து போலீசார் கூறும்போது, கிரிஜாவும், அவருடைய 2 மகள்களும் மாறி, மாறி வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 6 முறைக்கு மேல் மனு ஏற்பு ரசீது போட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மகளிர் போலீஸ் நிலையத்துக்கு விசாரிக்க அனுப்பி வைத்தபோது அவர் தீக்குளிக்க முயன்றுள்ளார் என்று தெரிவித்தனர்.
புகார் கொடுக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் வடக்கு போலீஸ் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story