விற்பனை சரிவு: சூளைகளில் தேங்கிக்கிடக்கும் செங்கற்கள்


விற்பனை சரிவு: சூளைகளில் தேங்கிக்கிடக்கும் செங்கற்கள்
x
தினத்தந்தி 13 March 2019 3:15 AM IST (Updated: 13 March 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

விற்பனை சரிந்துள்ளதால் சூளைகளில் செங்கற்கள் தேங்கிக்கிடக்கின்றன.

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகேயுள்ள முத்துசாமிபுரம், செவல்பட்டி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக செங்கல் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சொந்த நிலத்திலும் நிலத்தை குத்தகை எடுத்தும் செங்கல் தயாரித்து அதனை சூளையில் 15 நாள் சுட வைத்து பின்னர் விற்பனை செய்வார்கள்.

இந்த பகுதியில் தயாராகும் செங்கற்களுக்கு வலிமை அதிகம் என்பதால் தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து இங்கு வந்து செங்கற்களை வாங்கிச் செல்வார்கள். இதனால் மழைக்காலம் தவிர்த்து மற்ற நேரங்களில் செங்கல் தயாரிப்பு நடக்கும். ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர்.

ஆனால் தற்போது செங்கற்களுக்கு மாற்றாக சிமெண்டால் தயாராகும் கற்கள் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் சுற்றுச்சுவர் உள்ளிட்டவை கட்டுவதற்கு ஹாலோ பிளாக் கற்கள் வந்து விட்டன. சுற்றுச்சுவருக்கென்று ரெடிமேடு சிமெண்டு சுவர்களும் தற்போது கிடைக்கின்றன. இதனால் செங்கல் மவுசு இழந்து விட்டது. ஒரு கல் ரூ.7 வரை விற்று வந்த நிலையில் அதில் பாதியாக தற்போது விலை குறைந்து விட்டது.

பாதி விலை சொன்னாலும் வாங்குவதற்கு ஆள் இல்லை என்ற நிலை உருவாகி சூளைகளில் செங்கற்கள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் உற்பத்தியை நிறுத்தி விட்டனர். அங்கு வேலை செய்தவர்கள் வேலையிழந்து தவிக்கும் நிலை இருக்கிறது.

இதுகுறித்து செங்கல் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

மணல் தட்டுப்பாடு நிலவியதால் கட்டுமான தொழில் சமீப காலமாக பாதிக்கப்பட்டது. அன்று ஆரம்பித்த சரிவு எங்களுக்கு இன்றளவும் சீரடையவில்லை. மண் செங்கலை விட சிமெண்டு செங்கல் கட்டுமான பணியில் கையாள எளிதாக இருக்கிறது என்று பலரும் செங்கலை கைவிட்டு விட்டனர். பூச்சுமான செலவும் குறைவாக உள்ளது என்கிறார்கள். எனினும் அரசு கட்டிட கட்டுமான பணிக்கு இந்த செங்கலை பயன்படுத்த அறிவுறுத்தி எங்கள் தொழிலை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்கள்.

Next Story