கழிவுநீர் சங்கமிக்கும் கண்மாய்: கிராமங்களுக்கான குடி தண்ணீர் ஆதாரம் பாதிப்பு


கழிவுநீர் சங்கமிக்கும் கண்மாய்: கிராமங்களுக்கான குடி தண்ணீர் ஆதாரம் பாதிப்பு
x
தினத்தந்தி 13 March 2019 3:00 AM IST (Updated: 13 March 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அருகே உள்ள பெரியகுளம் கண்மாயில் கழிவுநீர் கலப்பதால் அங்கிருந்து ஆழ்துளை கிணறு மூலம் எடுக்கப்படும் குடிநீரும் மாசடைந்து வருகிறது.

ராஜபாளையம், 

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகுளம் கண்மாய் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் கண்மாய்க்கு அடுத்தபடியாக பெரிய கண்மாயாக உள்ளது. இந்த கண்மாயில் இருந்து அயன் கொல்லன் கொண்டான் மற்றும் நக்கனேரி ஊராட்சிகளுக்கு உட்பட்ட 120 எக்டேருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள், கால்வாய் மற்றும் கிணற்று நீர் மூலம் பாசன வசதி பெறுகின்றன.

இந்த கண்மாய் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூலம் சுந்தரநாச்சியார்புரம், சோலச்சேரி, கிருஷ்ணாபுரம், அயன் கொல்லன் கொண்டான் மற்றும் நக்கனேரி ஊராட்சிகளுக்கு குடி தண்ணீர் எடுக்கப்படுகிறது.

முக்கோண வடிவில் கரைகளை கொண்ட பெரியகுளம் கண்மாயில் மேற்குபுரம் ராஜபாளையம் தென்காசி சாலையில் தொடங்கி, கிருஷ்ணாபுரம் வழியாக தளவாய்புரம் சாலையில் முடிவுறுகிறது. அய்யனார் கோவில் ஆற்று தண்ணீர் முதல் அலச்சேரி மற்றும் சேத்தூர் பிளவாடி கண்மாய்களின் உபரி நீர்பாதைகள் உட்பட 12 பாலங்கள் வழியாக இந்த கண்மாய்க்கு நீர் வருகிறது.

இதில் வடக்கு அய்யனார் கோவில் ஆற்று உபரிநீர் வரும் வழித்தடம் தவிர்த்து பிற பகுதிகள் கழிவு நீர் கலக்கும் பகுதியாகும். கண்மாயின் தென்மேற்கு பகுதியில் சேத்தூர் பிளவாடி கண்மாயின் உபரிநீர் வரும் வழித்தடத்தில் தனியார் ஆலை கழிவு நீரும், சுந்தரநாச்சியார்புரம், கிருஷ்ணாபுரம் வடக்குதெரு, பஸ் நிறுத்தம், தெற்கு தெரு பகுதியில் உள்ள நீர் வழித்தடங்களில் குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவு நீரும் கலக்கின்றன.

ராஜபாளையம்- தளவாய்புரம் சாலையில் உள்ள சுந்தரநாச்சியார்புரம், கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில் சாலையின் இருபுறங்களிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் வருடக்கணக்காக தேங்கியுள்ள கழிவுநீர் கண்மாயிலும் சங்கமிக்கிறது. கண்மாய் தண்ணீர் மாசடைந்துள்ள நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலம் எடுக்கப்படும் தண்ணீரில் சுவை மாறி தண்ணீர் மாசடைந்து வருகிறது.

இதனால் இந்த தண்ணீர் சமைப்பதற்கு பயனற்றதாகி விட்டது. கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராமங்களில் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதால் இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story