496 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை கலெக்டர் ஷில்பா தகவல்


496 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 13 March 2019 4:00 AM IST (Updated: 13 March 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் 496 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் வாக்காளர் செலவினங்கள், கண்காணிப்பு பணிகள், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை மற்றும் தென்காசி (தனி) ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.

நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு கலெக்டராகிய நானும் (ஷில்பா), தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கமும் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளோம். நெல்லை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலெக்டர் அலுவலகம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் நெல்லை உதவி கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். தென்காசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அறையிலும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் 25 லட்சத்து 37 ஆயிரத்து 683 வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளனர். சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 15 ஆயிரத்து 370 விண்ணப்பங்களும், பெயர் நீக்க 367 விண்ணப்பங்களும், திருத்தம் செய்ய 2 ஆயிரத்து 656 விண்ணப்பங்களும், ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய 1,590 விண்ணப்பங்களும் பெறப்பட்டு உள்ளன.

நெல்லை மாவட்டத்தில் ஓட்டுப்பதிவுக்காக 1,382 இடங்களில் 2 ஆயிரத்து 979 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. 68 வாக்குச்சாவடிகள் இடமாற்றத்துக்காகவும், 29 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றத்துக்காகவும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் மற்றும் சாய்தளங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 13 ஆயிரம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர். அவர்களுக்கு தேவையான தகுந்த முன்னேற்பாடு வசதிகள் செய்து தரப்படும்.

நெல்லை மாவட்டத்தில் ஓட்டுப்பதிவையொட்டி 8 ஆயிரத்து 327 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களும், 4 ஆயிரத்து 465 கட்டுப்பாட்டு எந்திரங்களும், யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை சரிபார்க்கும் 4 ஆயிரத்து 543 ‘வி.வி.பேட்’ எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த எந்திரங்கள் அனைத்தும் முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் 30 பறக்கும் படைகள், 30 நிலையாக நிற்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒவ்வொரு வீடியோ கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டங்களை கண்காணித்து அறிக்கை அளிக்கும்.

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ரூ.20 லட்சமும், நேற்று ரூ.60 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆவணம் இன்றி பணம் எடுத்து செல்லக்கூடாது.

அரசு அலுவலக சுவர்களில் எழுதி உள்ள விளம்பரங்களை அழிக்க 24 மணி நேரமும், பொது இடங்களில் எழுதப்பட்டு உள்ள விளம்பரங்களை அழிக்க 48 மணி நேரமும், கட்சி தலைவர்களின் சிலைகளை துணி கொண்டு மறைக்க மற்றும் கொடி கம்பங்களை அகற்ற 72 மணி நேரமும் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. அனைத்து எம்.எல்.ஏ. அலுவலகங்கள், அரசு விருந்தினர் மாளிகைகளும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன. வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு ஏற்படுத்த கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள், ஊர்வலங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 496 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 32 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை ஆகும். இந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினரும், கூடுதல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தேர்தல் நேரத்தில் பிரதமர், முதல்-அமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை பயன்படுத்தி யாரும் நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடாது. ரூ.1 லட்சம் வழங்குவதாக வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர்கள் மத்தியில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தேர்தலைை-யொட்டி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ்குமார், தேர்தல் தாசில்தார் புகாரி ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story