அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை; ரூ.50 ஆயிரம் நிதி உதவி
திருப்பத்தூர் அருகே அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை மற்றும் ரூ.50 ஆயிரம் நிதி உதவியை கிராம மக்கள் வழங்கினர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே உள்ள கருப்பூர் கிராம மக்கள், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்குவது என முடிவெடுத்தனர். அதன்படி பள்ளிக்குத் தேவையான கல்வி உபகரணங்களான பீரோ, குடிநீர்குடம், பேன் மற்றும் தளவாடச் சாமான்கள், ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஊர் மந்தைக்கு கொண்டு வந்து வைத்தனர்.
தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் சீர்வரிசை பொருட்களை பள்ளிக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அவர்களை பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் குழுத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். சந்திரன், திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராதா கிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கி பேசினார்.
தொடர்ந்து இந்த பள்ளி 7 முறை புத்தாக்க அறிவியல் திறன் பயிற்சியில் மாநில விருது பெற்றதற்கும், தேசிய அளவில் 2017-18-ம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு பாராட்டுச் சான்றிதழ் பெற்றதற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆய்வு கட்டுரைப் போட்டியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு இளம் விஞ்ஞானி மற்றும் அப்துல்கலாம் விருது வாங்கியதற்காக சிறப்பு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் கல்வி சீர்வரிசை பொருட்களுடன், பள்ளியின் தரைதள வசதியை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் அறிவியல் ஆசிரியர் ஸ்டீபன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story