“அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி மூழ்கும் கப்பல்” திருநாவுக்கரசர் சாடல்


“அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி மூழ்கும் கப்பல்” திருநாவுக்கரசர் சாடல்
x
தினத்தந்தி 13 March 2019 3:15 AM IST (Updated: 13 March 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி மூழ்கும் கப்பல் என்று மாநில காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சாடினார்.

தூத்துக்குடி,

கன்னியாகுமரிக்கு செல்வதற்காக மாநில காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

பொள்ளாச்சி சம்பவத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று அரசு, குற்றவாளியை பாதுகாக்கும் விதத்திலோ, காப்பாற்றும் விதத்திலோ செயல்படக் கூடாது. இது மிகவும் கண்டனத்துக்கு உரியது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு போலீசார் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை கண்டறியப்பட்டு குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

தி.மு.க. கூட்டணி திடீரென உருவான கூட்டணி அல்ல. கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக போராட்டம் நடத்தி வருகிறோம். அந்த அடிப்படையில் கூட்டணி உருவாகி உள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை மோடியால் மிரட்டி வைக்கப்பட்ட கூட்டணி. அ.தி.மு.க.வினர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கூட்டணிக்கு செல்லவில்லை என்றால் வெளியில் இருப்பதே கஷ்டம். இதனால் அச்சுறுத்தி கூட்டணிக்கு கொண்டு வந்தார்கள். அதன்பிறகு இரவில் ஒரு கட்சியிடம் பேசிவிட்டு காலையில் மற்றொரு கட்சியுடன் பேசி கூட்டணி அமைக்கிறார்கள். இது கொள்கை ரீதியான கூட்டணி அல்ல. பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி மூழ்கும் கப்பல். இதில் ஏறி உள்ள எல்லா கட்சிகளும் மூழ்கும்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது. விவசாயி முதல் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இதனால் தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை, அ.தி.மு.க. அரசுக்கு எதிரான அலை வீசுகிறது. அதே நேரத்தில் எங்கள் கூட்டணி பலமான கூட்டணி. எங்கள் கூட்டணி 39 தொகுதியிலும் மகத்தான வெற்றியை பெறும். ராகுல்காந்தி நாட்டின் பிரதமராக வருவார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story