புதுவையில் பயங்கரம், கத்தியால் வெட்டி தாய் கொலை - 7 நாட்களாக வீட்டுக்குள் பிணத்துடன் வசித்த வாலிபர்
புதுவையில் நடத்தையில் சந்தேகமடைந்து தாயை கத்தியால் வெட்டி கொலை செய்து உடலை அறைக்குள் வைத்து பூட்டிய வாலிபர் 7 நாட்கள் அதே வீட்டில் வசித்து வந்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரி,
புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 20-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயசேகர உடையார். இவரது மனைவி ஜெயமேரி(வயது 51). இவர்களுக்கு அமலோற் பவநாதன்(28) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஜெயசேகர உடையார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இவர்களது மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஜெயமேரியும், அமலோற்பவநாதனும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டை புதிதாக வாங்கி இங்கு குடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்ற அமலோற்பவநாதன் அங்கிருந்த போலீசாரிடம் தனது தாயை கடந்த 5-ந் தேதி கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாகவும், வீட்டின் அறைக்குள் அவரது பிணத்தை வைத்து பூட்டி வைத்து இருப்பதாகவும் கூறினார். இதை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடம் லாஸ்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் அமலோற்பவநாதனை லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைதொடர்ந்து வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாகீர்உசேன், தயாளன் மற்றும் போலீசார் கொலை நடந்ததாக கூறப்பட்ட வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அந்த பகுதியில் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது.
திடீரென்று போலீசார் வந்து குவிந்ததால் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கூடினர். இதனால் அங்கு பரபரப்பாக இருந்தது. பின்னர் கிராம நிர்வாக அதிகாரி வரவழைக்கப்பட்டு அவரது முன்னிலையில் வீட்டின் கதவை திறந்தனர்.
அப்போது வீட்டின் பின்பக்க அறையில் ஜெயமேரி கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. சம்பவம் நடந்து ஒருவாரம் ஆகி விட்டதால் அழுகிய நிலையில் உடல் கிடந்தது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு தடயங்களை சேகரித்தனர்.
கொலையில் தொடர்பு
இதன்பின் ஜெயமேரியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். முக்கிய பிரமுகர்கள், படித்தவர்கள் அதிகம் வசிக்கும் லாஸ்பேட்டை பகுதியில் நடந்த இந்த பயங்கர கொலை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
அதன்விவரம் வருமாறு:-
நெல்லித்தோப்பு மார்க் கெட் தெருவைச் சேர்ந்தவர் ஜெயசேகர உடையார். இவருக்கு 3 மனைவிகள். கடந்த 2013-ம் ஆண்டு அவர் இறந்தார். இதைத்தொடர்ந்து ஜெயசேகர உடையாரின் 3-வது மனைவி செல்விக்கும், மற்றொரு மனைவியான ஜெயமேரிக்கும் சொத்து பிரச்சினை ஏற்பட்டது. இந்தநிலையில் செல்வி தனது பாதுகாப்பிற்காக கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மணவாளன்(44) என்பவரை அழைத்து வந்து தனது வீட்டில் தங்க வைத்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி மணவாளன் கடத்தி கொலை செய்யப்பட்டார். அப்போது இந்த கொலை தொடர்பாக ஜெயமேரி மற்றும் பீச்சவீரன்பேட் பகுதியை சேர்ந்த ரவுடி சோழன், அந்தோணிசாமி, ராஜேஷ் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜெயமேரி ஜாமீனில் வெளியே வந்தார்.
நடத்தையில் சந்தேகம்
பின்னர் முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரில் வாடகை வீட்டில் ஜெயமேரி வசித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன் லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரில் புதிதாக வீடு வாங்கி தனது மகன் அமலோற்பவ நாதனுடன் குடியேறினார். இவர் படித்து வீட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை அவரது தாயார் கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் ஜெயமேரி செல்போனில் சில வாலிபர்களுடன் பலமணி நேரம் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது நடத்தையில் அமலோற்பவநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து தாயார் ஜெயமேரியை கண்டித்துள்ளார். ஆனால் அதை அவர் கண்டு கொள்ளவில்லை. வழக்கம்போல் தொடர்ந்து வாலிபர்களுடன் ஜெயமேரி செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி அதிகாலை தூக்கத்தில் இருந்த அமலோற்பவநாதன் கண்விழித்து பார்த்துள்ளார். அப்போது அவரது தாயார் அறையில் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. உடனே அவர் அந்த அறைக்கு சென்று பார்த்தபோது ஜெயமேரி யாரிடமோ ஆன்-லைனில் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த அமலோற்பவநாதன் அருகில் இருந்த நாற்காலியை எடுத்து ஜெயமேரியை தலையில் தாக்கினார். இதில் அவர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். இதன்பிறகும் ஆத்திரம் அடங்காத அமலோற்பவநாதன் சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து வந்து ஜெயமேரியின் கழுத்தில் பல இடங்களில் வெட்டி கொலை செய்தார்.
பின்னர் உடலை வீட்டின் ஒரு அறைக்குள் போட்டு பூட்டி விட்டு அன்றாடம் வழக்கமான வேலைகளை அமலோற்பவநாதன் கவனித்தார். தொடர்ந்து அந்த வீட்டிலேயே அவர் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் அதிகமாக இருந்ததால் போலீஸ் நிலையத்துக்கு சென்று அமலோற்பவநாதன் சரணடைந்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடத்தையில் சந்தேகமடைந்து தாயை கொலை செய்து உடலை வீட்டிற்குள் வைத்து விட்டு 7 நாட்கள் அதே வீட்டில் வாலிபர் தங்கி இருந்தது லாஸ்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story