முன்விரோதத்தில் வாலிபர் குத்திக்கொலை கொத்தனார் உள்பட 5 பேர் கோர்ட்டில் சரண்


முன்விரோதத்தில் வாலிபர் குத்திக்கொலை கொத்தனார் உள்பட 5 பேர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 13 March 2019 3:45 AM IST (Updated: 13 March 2019 5:02 AM IST)
t-max-icont-min-icon

மதுரை புதூரில் முன்விரோதத்தில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய கொத்தனார் உள்பட 5 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

புதூர்,

மதுரையை அடுத்த கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 25). இவர், தனது நண்பர்களுடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதூர் ஜவகர்புரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பாருக்கு மது அருந்துவதற்காக சென்றார். அங்கு புதூர் காந்திபுரத்தை சேர்ந்த கொத்தனாராக வேலை செய்து வரும் பாலமுருகன் (25) என்பவரும் தனது நண்பர்களுடன் மது அருந்த வந்திருந்தார். மது அருந்திக் கொண்டிருந்த போது அழகுராஜா மற்றும் பாலமுருகன் தரப்பினர் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 தரப்பினரும் ஒருவரைக்கொருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்பினரையும் அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

இந்தநிலையில் அழகுராஜா நேற்று அதிகாலை புதூர் கற்பகநகர் 8-வது தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த பாலமுருகன் மற்றும் 4 பேர் சேர்ந்து வழிமறித்து தாக்கினர். மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அழகுராஜாவை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். அழகுராஜாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அழகுராஜா பரிதாபமாக இறந்துபோனார்.

இந்த சம்பவம் குறித்து புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் மற்றும் அவரது நண்பர்கள் மாரிமுத்து, மணிகண்டன், சதீஸ்குமார், முகேஷ்குமார் ஆகிய 5 பேரை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே அவர்கள் 5 பேரும் மதுரை மாவட்ட கோர்ட்டில் சரணடைந்தனர்.

முன்விரோதத்தில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story