நாகர்கோவில் அருகே 1,200 கிலோ ரே‌ஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது


நாகர்கோவில் அருகே 1,200 கிலோ ரே‌ஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 March 2019 10:15 PM GMT (Updated: 13 March 2019 5:22 PM GMT)

நாகர்கோவில் அருகே 1,200 கிலோ ரே‌ஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே பள்ளம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக நாகர்கோவில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் பள்ளம் பகுதியில் சம்பவத்தன்று அதிகாலை 3 மணி அளவில்  ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு காரில் வந்த 2 பேர், அங்கு ஒரு பகுதியில் மறைத்து வைத்திருந்த சிறு, சிறு மூடைகளை ஒரு மினி டெம்போவில் ஏற்றினர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து சோதனை நடத்தினர். இதில் சிறு, சிறு மூடைகளில் இருந்தது ரே‌ஷன் அரிசி என்பது தெரிய வந்தது. காரில் வந்த 2 பேர் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை அருகே உள்ள உச்சக்கடை புல்லுவட்டி பகுதியை சேர்ந்த மனு எஸ்.ராஜ் (வயது 27), திருவனந்தபுரம் அருகே உள்ள பொழியூர் இறச்சிறா பகுதியை சேர்ந்த ஷாஜி (21) என்பது தெரியவந்தது.

இவர்கள் 2 பேரும் பள்ளம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்களிடம் ரே‌ஷன் அரிசியை விலைக்கு வாங்கி தலா 50 கிலோ வீதம் சிறு, சிறு மூடைகளாக கட்டி வைத்து அவற்றை கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.

மொத்தம் 24 மூடைகளில் 1,200 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது. இதையடுத்து மனு எஸ்.ராஜ், ஷாஜி ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்கள் வந்த கார், ரே‌ஷன் அரிசி ஏற்ற பயன்படுத்தப்பட்ட மினி டெம்போ ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த ரே‌ஷன் அரிசியை கோணத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர்.

Next Story