பெண்கள் பாலியல் பலாத்காரம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் - போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கி அப்புறப்படுத்தினர்
பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் தண்டனை வழங்க கோரி பொள்ளாச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், குடும்ப பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பொதுமக்கள் மத்தியில் அந்த தண்டனை கொடுக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் எதிரே கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள். பொள்ளாச்சியில் உள்ள கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் ஊர்வலமாக வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த ஒருவர் மாணவ-மாணவிகள் மத்தியில் உணர்ச்சி பூர்வமாக பேசினார். அவரை போலீசார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையில் போராட்டத்தில் மாணவ-மாணவிகள் தவிர வெளியாட்கள் புகுந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கல்லூரி அடையாள அட்டை இல்லாதவர்கள் போராட்ட களத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மாணவ-மாணவிகள் அடையாள அட்டைகளை கழுத்தில் தொங்க விட்டப்படி போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது. அவர்கள் விசாரணையை தொடங்கி விட்டனர். எனவே உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள். தற்போது நீங்கள் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றார்.
அதற்கு அவர்கள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். ஆனால் தற்போது சாதாரண சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முயற்சி நடக்கின்றது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும். மக்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுவரைக்கும் இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்றனர். போலீஸ் அதிகாரிகள், அவர்களிடம் பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டவில்லை. போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு தேவையான குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டன. போராட்ட களத்திலேயே மதிய உணவை வாங்கி மாணவ-மாணவிகள் சாப்பிட்டனர். பின்னர் மாலை 3 மணிக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாடசாமி தலைமையில் துணை சூப்பிரண்டுகள் விவேகானந்தன், ஜெயராமன், மணி ஆகியோர் மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 4 மணிக்குள் கலைந்து செல்ல வேண்டும். இல்லையென்றால் கைது செய்து வழக்குப்பதிவு செய்யப்படும். வழக்குப்பதிவு செய்தால் படித்து விட்டு வேலைக்கு செல்ல முடியாது என்று போலீசார் எச்சரித்தனர்.
அதற்கு பிறகும் மாணவ-மாணவிகள் கலைந்து செல்லவில்லை. மாலை 4.15 மணிக்கு அதிரடிப்படை போலீசார் போராட்ட களத்திற்குள் புகுந்து மாணவ-மாணவிகளை வலுக்கட்டாயமாக தூக்கி அப்புறப்படுத்தினர். அப்போதும் மாணவர்கள் கைகளை சங்கிலி போன்று பிணைத்து நின்றனர். அவர்களை போலீசார் தர, தரவென்று இழுத்து சென்றனர். இதை பார்த்த மாணவிகள், மாணவர்களை சுற்றி நின்று கொண்டனர். பின்னர் பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு மாணவிகள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக சுமார் 15 நிமிடங்கள் அந்த பகுதி போர்க்களமாக காட்சி அளித்தது.
இதற்கிடையில் வீடியோ எடுத்த ஒரு மாணவிக்கும், போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய மாணவ-மாணவிகள் போராட்டம் மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது. மேலும் மாணவ-மாணவிகள் மகாலிங்கபுரம் வளைவு பகுதியில் போராட்டம் நடத்துவதாக தகவல் வெளியானதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதேபோன்று சப்-கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story