பூந்தமல்லியில் வக்கீல்கள் சாலை மறியல்


பூந்தமல்லியில் வக்கீல்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 March 2019 4:30 AM IST (Updated: 13 March 2019 11:23 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி பூந்தமல்லியில் வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி, 

பொள்ளாச்சியில் இளம்பெண்களை துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவாக பதிவு செய்து மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பூந்தமல்லியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வக்கீல்கள் நேற்று கோர்ட்டு பணிகளை புறக்கணித்து பூந்தமல்லி டிரங்க் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பூந்தமல்லி போலீசார் வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவ- மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story