துப்புரவு தொழிலாளி சாவில் திருப்பம் குளிர்பானத்தில் விஷம் கலந்து மனைவியே கொன்றது அம்பலம் தம்பி மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தீர்த்துக்கட்டினார்


துப்புரவு தொழிலாளி சாவில் திருப்பம் குளிர்பானத்தில் விஷம் கலந்து மனைவியே கொன்றது அம்பலம் தம்பி மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தீர்த்துக்கட்டினார்
x
தினத்தந்தி 14 March 2019 4:30 AM IST (Updated: 14 March 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அருகே துப்புரவு தொழிலாளி இறந்த சம்பவத்தில், தம்பி மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கட்டிய மனைவியே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றது தெரியவந்தது.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த ஆலப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சிவகுமார் (வயது 47). தனியார் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். இவரது மனைவி சந்திரா (42).

கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் மாடியில் இருந்து சிவகுமார் கீழே விழுந்து கிடந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குடிபோதையில் தவறி விழுந்து இறந்து விட்டதாக முதலில் கூறப்பட்டது. இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விஷம் கொடுத்து கொலை

இந்தநிலையில் சிவகுமார் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் மதனா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தங்களது விசாரணையை முடுக்கி விட்டனர். மேலும் பிரேதபரிசோதனை அறிக்கையில், சிவகுமார் விஷம் கொடுக்கப்பட்டும், கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சந்தேகத்தின்பேரில் சிவகுமாரின் மனைவி சந்திராவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவரும், அதே பகுதியில் வசிக்கும் சிவக்குமாரின் சகோதரர் ராஜமாணிக்கத்தின் மனைவி மாரியம்மாளும் சேர்ந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தும், கழுத்தை நெரித்தும் சிவகுமாரை கொலை செய்தது தெரியவந்தது.

பாலியல் தொல்லை

மேலும் கொலையை மறைத்து மதுபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக அனைவரையும் நம்ப வைத்து விட்டனர்.

இதனையடுத்து சந்திராவையும், மாரியம்மாளையும் போலீசார் கைது செய்தனர். மாரியம்மாளுக்கு சிவகுமார் பாலியல் தொல்லை கொடுத்ததால், இருவரும் சேர்ந்து அவரை தீர்த்து கட்டியதாக தெரிவித்தனர். பின்னர் இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Next Story