தளி அருகே, தேனீக்கள் கொட்டி முதியவர் சாவு - 5 பேர் படுகாயம்
தளி அருகே தேனீக்கள் கொட்டி முதியவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள ஒசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜண்ணா (வயது 60). இவர் நேற்று தளியில் நடந்த தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மொபட்டில் சென்றார். அங்கு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் மொபட்டில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
வழியில் தளி அருகே ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் இருந்து தேனீக்கள் கூட்டம் கலைந்தது. இதையடுத்து அந்த தேனீக்கள் பறந்து சென்று பொதுமக்களை விரட்டி, விரட்டி கொட்டியது. அப்போது, மொபட்டில் வந்து கொண்டிருந்த ராஜண்ணாவையும் தேனீக்கள் கொட்டியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். மேலும் இந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 5 பேரையும் தேனீக்கள் கொட்டின. படுகாயம் அடைந்த 6 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ராஜண்ணா ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜண்ணா உயிரிழந்தார். மற்ற 5 பேரும் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனீக்கள் கொட்டி முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story