மனைவி, மகளுடன் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


மனைவி, மகளுடன் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 13 March 2019 11:15 PM GMT (Updated: 13 March 2019 8:51 PM GMT)

திருச்சி செந்தண்ணீர்புரத்தில் மனைவி, மகளுடன் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். உருக்கமான கடிதம் சிக்கியது.

பொன்மலைப்பட்டி,

திருச்சி செந்தண்ணீர்புரம் பாரி தெரு மூன்றாவது குறுக்கு சந்தில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வந்தவர் பால சகாயராஜ்(வயது 43). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி யுவராணி(40), மகள் முத்துலட்சுமி(25). முத்துலட்சுமி நர்சிங் படித்து வந்தார். இவர்களது வீடு கடந்த 2 நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் இருந்தது.

இந்நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி மாத வாடகை பணம் வாங்குவதற்காக பால சகாயராஜின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால் பேச முடியவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த விஜயலட்சுமி நேற்று இரவு 7 மணி அளவில் நேரில் வந்து பார்ப்பதற்காக மாடிப்பகுதிக்கு சென்றார். அப்போது துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்தபோது பால சகாயராஜ் தனியாகவும், யுவராணியும், முத்துலட்சுமியும் ஒரே சேலையிலும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். பொன்மலை சரக உதவி போலீஸ் கமிஷனர் பாலமுருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் காவேரி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர். 3 உடல்களும் அழுகிய நிலையில் இருந்ததால் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் உடல்களை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி பொன்மலை போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பால சகாயராஜ் குடும்பத்தினர் ஒரு மாதத்திற்கு முன்புதான் பாரி தெருவுக்கு குடிவந்து உள்ளனர். அதற்கு முன்பு செந்தண்ணீர்புரம் முத்துமணி டவுன் பகுதியில் குடியிருந்தனர். 3 மாதங்களுக்கு முன்பு பால சகாயராஜின் 17 வயது மகன் நந்தகுமார் உடல் நலக்குறைவினால் திடீர் என இறந்து விட்டார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து விடுபடுவதற்காக தான் வீட்டை மாற்றி புது இடத்திற்கு வந்து உள்ளனர். எனவே மகனின் இறப்பை தாங்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தற்கொலை நடந்த வீட்டில் இருந்து போலீசார் ஒரு கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். பால சகாயராஜ் கைப்பட எழுதிய அந்த கடிதத்தில் எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நாங்களாகத்தான் இந்த முடிவை எடுத்தோம். யுவராணியின் அக்காள் சுசீலாவிடம் வாங்கிய ரூ.50 ஆயிரம் தொகைக்காக எனது ஆட்டோவை விற்று கடனை அடைத்து விடுங்கள் என்று உருக்கமாக எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் பலரிடம் கடன் வாங்கி இருக்கலாம். கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செந்தண்ணீர்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் நிஷா சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார்.

Next Story