மருமகள் மீதான புகாரை போலீசார் வாங்க மறுப்பு, விவசாயி விஷம் குடித்து தற்கொலை - சின்னாளப்பட்டி அருகே பரபரப்பு


மருமகள் மீதான புகாரை போலீசார் வாங்க மறுப்பு, விவசாயி விஷம் குடித்து தற்கொலை - சின்னாளப்பட்டி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 14 March 2019 4:15 AM IST (Updated: 14 March 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

சின்னாளப்பட்டி அருகே மருமகள் மீதான புகாரை போலீசார் வாங்க மறுத்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சின்னாளப்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள கலிக்கம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 60). விவசாயி. இவரது மகன் ஜெயராமுக்கு கடந்த 10 வருடத்திற்கு முன்பு ஜெயா என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் ஜெயராமுக்கும், ஜெயாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடமாக பிரிந்து வாழ்கின்றனர்.

இதனிடையே கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஜெயராம் விருவீடு கிராமத்தைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டு கலிக்கம்பட்டியில் உள்ள பாண்டியராஜன் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட முதல் மனைவி ஜெயா கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து மாமனார் பாண்டியராஜனிடம் கணவர், 2-வது திருமணம் செய்தது குறித்து தகராறு செய்துள்ளார்.

இதனால் பாண்டியராஜன் நேற்று முன்தினம் சின்னாளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்து தனது மகன் முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர்தான் 2-வது திருமணம் செய்து கொண்டான். ஆனால் அவனது முதல் மனைவி ஜெயா என்னை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் கொடுத்தார். இதற்கு போலீசார் விவாகரத்து பெற்றதற்கான ஆதாரத்தை கொண்டு வந்து புகார் செய்யுமாறு கூறியதாக தெரிகிறது.

இந்தநிலையில் பாண்டியராஜன், தனது புகாரை போலீசார் வாங்க மறுப்பதாகவும், மிரட்டுவதாகவும் கூறி வீட்டில் வைத்து விஷம் குடித்தார். இதையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பாண்டியராஜன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story