திருமண மண்டபம், திரையரங்க உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் கலெக்டர் பேச்சு


திருமண மண்டபம், திரையரங்க உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 13 March 2019 11:00 PM GMT (Updated: 13 March 2019 8:30 PM GMT)

திருமணமண்டபம், திரையரங்கம் உள்ளிட்டவைகளின் உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடை பிடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார்.

புதுக்கோட்டை,

நாடாளுமன்ற பொது தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடித்தல் தொடர்பாக திருமணமண்டபம், திரையரங்கம், தங்கும் விடுதிகள், அடகு கடை மற்றும் வட்டிக்கடை, அச்சக உரிமை யாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் போன்றவற்றை அரசியல் கட்சியினர் அல்லது வேட்பாளர்கள் கூட்டங்கள் மற்றும் பிரசாரம் செய்ய பயன்படுத்தினால் அதற்கான செலவுத் தொகை அவர்களது தேர்தல் செலவுக்கணக்கில் சேர்க்கப்படும். எனவே இதன் விபரத்தை தினந்தோறும் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.

இதே போன்று நகை அடகு கடை மற்றும் வட்டிக்கடை உரிமையாளர்கள் தங்களது வரவு, செலவு விபரங்கள் அடங்கிய தினசரி அறிக்கைகளை சம்பந்தப்பட்ட தொகுதியில் உள்ள அலுவலருக்கு நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் கூட்டங்கள் நடத்தவும் மற்றும் தேர்தல் பிரசாரம் செய்வதற்கும், விளம்பர சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் பயன்படுத்தினால் அதுகுறித்த செலவு தொகை விபரங்களை அச்சக உரிமையாளர்கள் தினமும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் உரிம விதிகளை தவறாமல் கடைபிடித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் நாடாளுமன்ற பொது தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, உதவி ஆணையர் (கலால்) கார்த்திகேயன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அச்சகம், திருமண மண்டபம், திரை யரங்கம், நகை அடகுகடை மற்றும் வட்டிக்கடை உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story