தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: கிருஷ்ணராயபுரம்-அரவக்குறிச்சி பகுதியில் வாகன சோதனை கலெக்டர் ஆய்வு


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: கிருஷ்ணராயபுரம்-அரவக்குறிச்சி பகுதியில் வாகன சோதனை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 13 March 2019 11:00 PM GMT (Updated: 13 March 2019 8:43 PM GMT)

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கிருஷ்ணராயபுரம்-அரவக்குறிச்சி பகுதியில் வாகன சோதனை நடந்தது. இதனை கலெக்டர் அன்பழகன், போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் நேற்று ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணராயபுரம்,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரூ.50 ஆயிரத்திற்கு க்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள் அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்றும், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசெல்லப்படும் பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்படும் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக கரூர் மாவட்டத்தில் 12 பறக்கும் படைகள் மற்றும் 12 நிலையான கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் 3 ஷிப்டுகளாக 24 மணிநேரமும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் கிருஷ்ணராயுரம் அருகே உள்ள மணவாசி சுங்கச்சாவடி மற்றும் அரவக்குறிச்சி பகுதியில் உள்ள ஆண்டிப்பட்டி கோட்டை சுங்கச்சாவடி ஆகிய பகுதிகளில் பறக்கும் படையினர் வாகனசோதனையில் நேற்று ஈடுபட்டனர்.

இந்தபணியினை தேர்தல் நடத்தும் அலுவலருமான, மாவட்ட கலெக்டருமான அன்பழகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் ஆய்வு செய்தனர். அப்போது வாகனங்களில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் ஏதேனும் கொண்டுசெல்லப்படுகின்றதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீனாட்சி (அரவக்குறிச்சி) மல்லிகா (கிருஷ்ணராயபுரம்) உள்ளிட்ட அலுவலர்கள், போலீசார் உடனிருந்தனர்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட பஸ் நிலையம், கோவை சேலம் புறவழிச்சாலை ரவுண்டானா, மேற்கு பிரதட்சனம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை கரூர் நடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அன்பழகன் ஆய்வு செய்தார். அரசியல் கட்சியினர் பொது இடங்களில் தங்கள் கட்சி தொடர்பான விளம்பரங்கள் உள்ளதை தாமாக முன்வந்து அழித்திட வேண்டும் என்றும், அவ்வாறு சுவர் விளம்பரங்களை அழிக்காத இடங்களில் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்குறிய கட்டணம் அந்தந்த அரசியல் கட்சிகளின் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் எவ்வித பேனர் மற்றும் சுவர் விளம்பரங்களுக்கும் அனுமதி கிடையாது என்றும் மற்றும் ஊரகப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளரின் அனுமதி பெற்று சுவர் விளம்பரம் மட்டும் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story