மோடி ஆட்சியை அகற்ற வேண்டும் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் ஆவேச பேச்சு


மோடி ஆட்சியை அகற்ற வேண்டும் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் ஆவேச பேச்சு
x
தினத்தந்தி 13 March 2019 11:15 PM GMT (Updated: 13 March 2019 9:18 PM GMT)

மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் நாகர்கோவிலில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சூளுரைத்தனர்.

நாகர்கோவில்,

புலவாமா தாக்குதலுக்கு பிறகு சரிந்து கிடந்த பா.ஜனதாவின் செல்வாக்கு உயர்ந்து விட்டது என்று எடியூரப்பா சொன்னார். அது எடியூரப்பாவின் குரல் அல்ல. மோடியின் குரல். சமத்துவமும், சகோதரத்துவமும், மத நல்லிணக்கமும், கூட்டாட்சி தத்துவமும் காப்பாற்றப்பட, நாட்டின் பிரதமராக ராகுல்காந்தி ஆவதற்கு இந்த கூட்டணி அமைந்துள்ளது. மோடி ஆட்சியை அகற்ற வேண்டும்

இவ்வாறு வைகோ பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது கூறியதாவது:-

இந்த நாட்டின் வளர்ச்சிக்காக, மேம்பாட்டுக்காக ராகுல்காந்தி தலைமையில் அகில இந்திய அளவில் ஒரு அணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் தமிழக தலைவராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற அணியை அமைத்துள்ளோம். அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டுமா? இந்தியாவில் அனைத்து மொழிகளும் பேசுகிறவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டுமா? மனிதன் என்ன உண்ண வேண்டும்? என்பதற்கு வித்திடாமல் அவன் எதையும் சாப்பிடுவதற்கு அனுமதி கிடைக்குமா?, இதெல்லாம் வேண்டும் என்று சொன்னால் மதசார்பற்ற நமது கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும்.

இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தியும், தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினும் வர கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், “நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற மக்கள் யுத்தம் ஆகும். பாசிச சக்திகளை விரட்டி அடிப்பதற்காக கொள்கை சார்ந்து, நாம் கைகோர்த்து இருக்கிறோம். ஆனால் எதிர் கட்சியினர் கார்ப்பரேட் பங்குகளை ஒருவருக்கு ஒருவர் விற்பது போல பேரம் பேசி வாக்கு வங்கிகளை அடிப்படையாக கொண்டு கூட்டணி வைத்து இருக்கிறார்கள். அது வணிக கூட்டணி. ஜனநாயகத்தை காப்பாற்ற 40 தொகுதிகளிலும் நம் கூட்டணி வெற்றி பெற வேண்டும். ராகுல்காந்தியை இந்தியாவின் ஆட்சி பீடத்தில் அமர வைக்க வேண்டும்“ என்றார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில், “ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவ-மாணவிகள் அடுத்த பிரதமர் யார்? என்று ராகுல்காந்தியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் தான் பிரதமர் என்று தன்னடக்கத்துடன் ராகுல்காந்தி பதில் கூறினார். இந்த தன்னடக்கம் தான் அவர் பிரதமர் ஆவதற்கான தகுதிகள். இந்தியா மற்றும் தமிழகத்தில் மதசார்பற்ற ஆட்சியை கொண்டு வந்து நாட்டை காக்க வேண்டும். மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “கட்சி வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கைகளில் வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்று கூடியிருக்கிறோம். இப்போதும் நம்முடைய லட்சியம் பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது மட்டும் தான். எனவே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்“ என்று கூறினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியபோது, “நம்முடைய எதிர் அணி மிகவும் பலவீனமான அணியாக இருக்கிறது. ஆனால் நம்முடைய அணி மக்களுடைய பிரச்சினைக்காக தொடர்ந்து போராடிய அணி ஆகும். மாநிலத்தின் நலனுக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் போராடி கொண்டு இருக்கின்ற அணி ஆகும். நமக்கு பொய் சொல்லாத பிரதமர் தான் வேண்டும். ஆனால் பிரதமர் நரேந்திரமோடி என்னவெல்லாம் பொய் சொல்லி இருக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். எனவே பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்“ என்றார்.

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் பேசியபோது, “ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு தொழில் செய்பவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலாளியாக இருந்தவர்கள் தொழிலாளியாக மாறி உள்ளனர். கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு சிறிய தொகையை கொடுத்து தட்டிக்கழித்து விட்டது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி வரவில்லை. ஆனால் தேர்தல் வந்து விட்டதால் பிரதமர் நரேந்திரமோடி அனைத்து மாவட்டங்களுக்கும் வந்து காட்சி அளிப்பார்“ என்றார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசியபோது, “பா.ஜனதாவினர் பணத்தை மதிப்பிழக்கச் செய்து அரசியல் செய்தனர். மாட்டு அரசியலும் செய்தார்கள். 2019-ம் ஆண்டு தேர்தல் அரசியல் கட்சிகளின் தலை எழுத்தை தீர்மானிக்கின்ற தேர்தல் அல்ல. மதசார்பின்மையையும், ஜனநாயகத்தையும், மாநிலங்களின் உரிமைகளையும் நிலை நாட்டுகின்ற தேர்தல் ஆகும்“ என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் பேசியபோது, “நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவின் 2-வது சுதந்திர போராட்டம் என்று கூறவேண்டும். தமிழகம் உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும்“ என்றார்.

கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசுகையில், “தமிழகத்தில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி பணம் மதிப்பிழப்பையும், ஜி.எஸ்.டி.யையும் சாதனையாக சொல்லி இருக்கிறாரா? என்றால் இல்லை. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சொல்கிறார்கள். டி.டி.வி. தினகரனும், ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக சொல்கிறார். எனவே ஜெயலலிதா சாவில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்“ என்றார்.

Next Story