ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு, வெள்ளாற்றில் இறங்கி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
வெள்ளாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆற்றுக்குள் இறங்கி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை அவர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே உள்ள அரங்கூர் கிராமத்தையொட்டி வெள்ளாறு பாய்ந்தோடுகிறது. இந்த ஆற்றில் இருந்து, பெரம்பலூர் மாவட்டம் லப்பை குடிகாடு பேரூராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இங்கு ஆழ்துளை கிணறு அமைத்தால், தங்கள் கிராமப்புற பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படும், மேலும் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் தங்களது கிராமத்தையொட்டிய பகுதியில் ஆழ்துளை கிணறு அமைப்பதை கைவிட வேண்டும் என்று அரங்கூர் கிராம மக்கள் கூறிவந்தனர்.
இவர்களது எதிர்ப்பையும் மீறி, அங்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி வேகமாக நடந்து வந்தது. இதையடுத்து, கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நேற்று வெள்ளாற்று பகுதிக்கு சென்று, அங்கு நடந்த பணிகளை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர்.
அப்போது, அங்கிருந்த ஒப்பந்ததாரர்கள் ஏன் பணிகளை தடுக்கிறீர்கள் என்று கேட்டு பொதுமக்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அங்கிருந்த எந்திரங்கள் மற்றும் இதர பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும் ஆற்றில் தோண்டப்பட்டு இருந்த சுமார் 20 அடி ஆழ பள்ளத்திற்குள் பெண்கள் உள்பட அனைவரும் இறங்கி, கான்கிரீட் போடுவதற்காக வைக்கப்பட்டு இருந்த கட்டுமான பொருட்களையும் அவர்கள் அப்புறப்படுத்தினார்கள். இதன் காரணமாக, அங்கு வேலை செய்தவர்கள், உடனடியாக பணிகளை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்று கிராம மக்கள் அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story