காரைக்கால் மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்க பாடுபட வேண்டும் - அமைச்சர் கமலக்கண்ணன் பேச்சு


காரைக்கால் மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்க பாடுபட வேண்டும் - அமைச்சர் கமலக்கண்ணன் பேச்சு
x
தினத்தந்தி 14 March 2019 4:15 AM IST (Updated: 14 March 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காரைக்கால் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்க தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவரும், அமைச்சருமான கமலக்கண்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

திருநள்ளாறு தொகுதியை பொருத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிகமான வாக்குகள் பெற்று வருகிறது. அதேபோல் வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் அதிகமாக வாக்குகளை பெறுவோம், காரைக்கால் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்க தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும்.

குறிப்பாக புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதாக நினைத்து தொண்டர்கள் பாடுபட வேண்டும். நமது லட்சியம் புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி பெறுவது மட்டுமின்றி, மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாதது போன்றவற்றால் மக்கள் அனுபவித்த துன்பங்களையும், புதுச்சேரியில் மாநிலம் முழுவதும் இலவச அரிசித்திட்டத்தை முற்றிலும் முடக்கிய கவர்னர் கிரண்பெடியின் மக்கள் விரோத செயல்பாடுகளையும் எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்டத்தலைவர் பாஸ்கரன், திருநள்ளாறு தொகுதி தலைவர் அசோகானந்தன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிங்காரவேலு, சமூக வலைதளப்பிரிவு மாவட்டப்பொறுப்பாளர் முருகபூபதி, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் சதீஷ், மாணவர் காங்கிரஸ் தலைவர் சிவபாலன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story