கூலித்தொழிலாளியிடம் ரூ.2 லட்சம் திருட்டு


கூலித்தொழிலாளியிடம் ரூ.2 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 13 March 2019 10:00 PM GMT (Updated: 13 March 2019 11:11 PM GMT)

காஞ்சீபுரம் அருகே கூலித்தொழிலாளியிடம் ரூ.2 லட்சத்தை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் திருப்பருத்திக்குன்றம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் மூர்த்தி. கூலித்தொழிலாளி. இவருடைய மகளின் திருமணம் இன்னும் 15 நாட்களில் நடைபெற உள்ளது.

மகளின் திருமண செலவுக்காகவும், பத்திரிகை வைப்பதற்காகவும் திருப்பருத்திக்குன்றத்தில் உள்ள காஞ்சீபுரம் கூட்டுறவு வங்கிக்கு சென்ற மூர்த்தி, அங்கு தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை எடுத்தார். பின்னர் மற்றொரு வங்கியில் இருந்து ரூ.85 ஆயிரம் எடுத்தார். ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்தை தனது கைப்பையில் வைத்துக்கொண்ட அவர், சைக்கிளில் தனது மனைவியுடன் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் உறவினரை சந்திக்க சென்றார்.

அப்போது வைகுண்ட பெருமாள் சன்னதி தெருவில் உள்ள தள்ளுவண்டி கடையில் இருவரும் கேழ்வரகு கூழ் அருந்தினர். அப்போது ஒரு மர்மநபர் மூர்த்தியிடம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வழி கேட்டுள்ளார்.

இவர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வழி சொல்லிவிட்டு திரும்பி பார்த்தார். அப்போது சைக்கிளில் இருந்த பணம் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. யாரோ பணத்தை திருடிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து போலீசில் மூர்த்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூ.2 லட்சத்தை திருடிச்சென்றவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story