காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு மனமுடைந்த சிறுமி விஷம் குடித்தார் காதலன் கைது


காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு மனமுடைந்த சிறுமி விஷம் குடித்தார் காதலன் கைது
x
தினத்தந்தி 13 March 2019 10:00 PM GMT (Updated: 13 March 2019 11:11 PM GMT)

காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த சிறுமி விஷம் குடித்தார். இதையடுத்து அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள ஆரிக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 24). டிப்ளமோ முடித்து உள்ள இவர் தற்போது பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இருவரும் தனிமையில் பலமுறை ஜாலியாக இருந்துள்ளனர். இந்த நிலையில் ஜெயபாலுக்கு அவரது பெற்றோர் வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க முயற்்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த சிறுமி காதலன் வீட்டுக்கு சென்று என்னை காதலித்து விட்டு வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய முயற்சி செய்வது நியாயமா என்று கேட்டார். இது குறித்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் ஜெயபால் தகாத வார்த்தைகள் பேசியதால் மனம் உடைந்த அந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்து (விஷம்) குடித்து விட்டார்.

ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அந்த சிறுமியின் தாய் ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story