திருப்பூரில், அரசு பஸ் மீது கல்வீச்சு; 2 பயணிகள் காயம் - கல்லூரி மாணவர் கைது
திருப்பூரில் அரசு பஸ் மீது கல் வீசியதில் கண்ணாடி உடைந்து பயணிகள் 2 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில்கூறப்படுவதாவது:-
நல்லூர்,
திருப்பூரில் இருந்து திருச்சியை நோக்கி நேற்று நள்ளிரவு 1 மணிக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை குளித்தலை செட்டியார்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி (வயது 41) என்பவர் ஓட்டினார். திருச்சி, மணப்பாறையை சேர்ந்த தங்கவேல் (39) நடத்துனராக இருந்தார். பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் திருப்பூர்- காங்கேயம் ரோடு நல்லூர் பகுதியில் வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் கல் மற்றும் தர்ப்பூசணி துண்டுகளை எடுத்து பஸ் மீது வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
இதில் பஸ்சின் முன்பக்க இருக்கையில் அமர்ந்து இருந்த தஞ்சாவூர் பேராவூரணி பகுதியை சேர்ந்த குமாரசாமி (51) மற்றும் ஜான்சி ராணி (38) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் இருவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் இருவரும் சென்று விட்டனர். இது குறித்து பஸ் டிரைவர் வெள்ளைச்சாமி திருப்பூர் ஊரக போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதிக்கு சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண விழா நடைபெற்று கொண்டிருந்தது. அங்கு சென்ற போலீசார், பஸ் மீது கல்வீசிய வாலிபர் யார்? என்று விசாரித்தனர்.
விசாரணையில் பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்த வாலிபர் திருப்பூர், ராக்கியாபாளையம், வள்ளியம்மை நகர், 7-வது வீதியை சேர்ந்த பழனிசாமி மகன் மனோஜ்குமார் (20) என்பதும், தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.காம் படித்து வருவதும், குடிபோதையில் அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து மனோஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து ஊரக போலீசார் தொடர்ந்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story