வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகள் கலெக்டர் ரோகிணி தகவல்
வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க தேர்தல் ஆணையத்தால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன என்று கலெக்டர் ரோகிணி கூறினார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என கண்காணித்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நேற்று சேலம் சி.எஸ்.ஐ. சிறப்பு பள்ளியில் நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி கை, கால் பாதித்த மாற்றுத்திறனாளிகள் வாக்குமையம் சென்று வாக்குப்பதிவு செய்ய அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வு தளம் அமைக்கப்பட்டு உள்ளது.
அதே போன்று ஓட்டுப்பதிவு அன்று, ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும், சக்கர நாற்காலி மற்றும் ஒரு உதவியாளர் வசதியும் செய்யப்படும். மேலும், பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு செய்ய வாக்குச்சாவடியில் உதவியாளர் வசதியுடன் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்களை தொட்டுப்பார்த்து உணர்ந்து கொண்டு, வாக்களிக்கும் வகையில் கூடுதல் வசதி செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வாக்குச்சாவடிகளில் அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல் ஆணையத்தால் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, மனவளர்ச்சி குன்றியோர், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தேர்தல் விழிப் புணர்வு குறித்து ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதனை கலெக்டர் ரோகிணி, பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் வந்தனா கார்க், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி சுப்ரமணி மற்றும் சி.எஸ்.ஐ. பள்ளி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story