கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்


கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 14 March 2019 3:00 AM IST (Updated: 14 March 2019 4:42 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்யும்படி வற்புறுத்தியதால் இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து எரித்த காதலன் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையை முடித்து கோர்ட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே உள்ளது ஆலங்குளம். இந்த ஊரைச்சேர்ந்த விவசாயி வீரபாண்டி என்பவரின் மகள் மாலதி(வயது 20). சென்னை கல்லூரியில் பி.ஏ. படித்துவிட்டு அங்கு வேலை தேடி வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 29-ந்தேதி திருவிழாவிற்கு வீட்டிற்கு வந்தவர் மாயமாகி விட்டார். அதன்பின்னர் கடந்த ஜூலை மாதம் 13-ந் தேதி உத்தரகோசமங்கை விலக்கு அருகே கண்மாய் பகுதியில் அழுகிய நிலையில் எலும்புகூடாக எரிந்த நிலையில் உடல் கிடந்தது. சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு கிடந்த துப்பட்டாவை வைத்து மாலதி என்பதை உறுதி செய்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் மாலதி எல்.கருங்குளம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் சிவக்குமார்(30) என்பவருடன் பழகியது தெரிந்தது. சிவக்குமார் மாயமாகி விட்டதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரபிரகாஷ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. சம்பவ இடத்தில் கிடந்த உடல் எலும்புகள் உள்ளிட்டவைகள் மாலதி தானா? என்பதை உறுதி செய்வதற்காக டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பட்டன.

இந்த நிலையில் சிவக்குமார் போலீசில் சரண் அடைந்தார். ஏற்கனவே திருணமாகி குழந்தை உள்ள நிலையில் அதனை மறைத்து மாலதியுடன் பழகியுள்ளார். திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் மாலதியை தீர்த்து கட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்த அவர் சம்பவ இடத்திற்கு வரவழைத்து மாலதியை பலமாக தாக்கி உள்ளார். கீழே விழுந்ததும் அவரின் துப்பட்டாவை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். காலால் மிதித்ததில் முகத்தில் ரத்தம் வழிந்ததால் கழுத்தில் இருந்த துப்பட்டாவை வைத்து துடைத்துவிட்டு வீசியுள்ளார். இதன்பின்னர் வீட்டிற்கு சென்று மண்எண்ணெய் எடுத்து வந்து முள் செடிகளின் மேல் மாலதியை போட்டு தீவைத்து எரித்துள்ளார். அவர் வைத்திருந்த கைப்பை, தாலி, மண்எண்ணெய் கேன் ஆகியவற்றை அருகில் குழி தோண்டி புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மாலதியின் உடல் எலும்புகள் மற்றும் பெற்றோரின் ரத்த மாதிரிகளை வைத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்ததில் இறந்தது மாலதி தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். பரமக்குடி கோர்ட்டில் சிவக்குமாரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தீவிரமாக துப்பு துலக்கி பரிசோதனைகளை மேற்கொண்டு மாலதியின் உடல்தான் என்பதை உறுதி செய்து அதன் அடிப்படையில் சிவக்குமாரை கைது செய்து விசாரித்து வந்த போலீசார் விசாரணையை முடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். பரமக்குடி கோர்ட்டில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரபிரகாஷ் இதற்கான குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

Next Story