நெல்லையில் இருந்து 670 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தேனிக்கு கொண்டு செல்லப்பட்டன


நெல்லையில் இருந்து 670 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தேனிக்கு கொண்டு செல்லப்பட்டன
x
தினத்தந்தி 13 March 2019 9:30 PM GMT (Updated: 13 March 2019 11:13 PM GMT)

நெல்லையில் இருந்து 670 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் லாரி மூலம் தேனி மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

நெல்லை,

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்பல்) 18-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. ஒரு சில மாவட்டங்களில் கூடுதலாக மின்னணு எந்திரங்கள் உள்ளன. அந்த எந்திரங்கள் கூடுதலாக தேவைப்படும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

நெல்லை மாவட்டத்தில் 8 ஆயிரத்து 327 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களும், 4 ஆயிரத்து 465 கட்டுப்பாட்டு எந்திரங்களும், யாருக்கு ஓட்டு போடுவோம் என்பதை சரிபார்க்கும் ‘வி.வி.பேட்‘ என்ற அழைக்கப்படும் எந்திரங்கள் 4 ஆயிரத்து 543 தயார் நிலையில் உள்ளன.

இந்த எந்திரங்கள் நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த எந்திரங்கள் சோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அந்த மையத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதில் நெல்லை மாவட்டத்துக்கு போக கூடுதல் எந்திரங்கள் இருந்தன. இவற்றை பற்றாக்குறை உள்ள தேனி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான கலெக்டர் ஷில்பா உத்தரவின் படி, தேர்தல் அதிகாரிகள் ராமையன்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வந்தனர். அதிகாரிகள் முன்னிலையில் அங்கு பெட்டியில் வைக்கப்பட்டு எந்திரங்களை தொழிலாளர்கள் லாரியில் ஏற்றினர்.

இந்த வகையில் 640 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், 500 கட்டுப்பாட்டு எந்திரம், 250 வி.வி.பாட் எந்திரங்கள் லாரி மூலம் தேனி மாவட்டத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. 

Next Story