தூத்துக்குடியில் வீடியோ கண்காணிப்பு குழு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது


தூத்துக்குடியில் வீடியோ கண்காணிப்பு குழு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 13 March 2019 9:45 PM GMT (Updated: 13 March 2019 11:13 PM GMT)

தூத்துக்குடியில் வீடியோ கண்காணிப்பு குழு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வீடியோ கண்காணிப்பு குழு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து தெளிவாக அறிவித்து உள்ளது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் பல்வேறு பிரசாரங்களில் ஈடுபடுவார்கள். அந்த பிரசார கூட்டம் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறதா என்பதை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

குறிப்பாக வாகனங்களை சோதனையிடும்போது வாகனத்தின் பதிவு எண்ணை பதிவு செய்ய வேண்டும். வீடியோ பார்வையாளர்கள், குழுக்கள் சோதனையில் வீடியோ பதிவு செய்ததை சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், வாகன சோதனையில் ஈடுபடும் அனைத்து வீடியோ பதிவுகளும் அன்றைய தினமே குறுந்தகட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும். செலவின பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் இந்த வீடியோக்களை ஆய்வு செய்ய உள்ளதால், அனைத்து விவரங்களும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சுகுமார் (பொது), கிறிஸ்டி (கணக்கு) உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story