நெல்லை அருகே திருட்டு மணல் அள்ளி வந்த லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி


நெல்லை அருகே திருட்டு மணல் அள்ளி வந்த லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 14 March 2019 3:15 AM IST (Updated: 14 March 2019 4:43 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே திருட்டு மணல் அள்ளி வந்த லாரி கவிழ்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை பர்கிட் மாநகர் பகுதியை சேர்ந்த ரங்கராஜ் மகன் உய்க்காட்டான் (வயது 20) கூலி தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த ஒருவரும் நெல்லை அருகே உள்ள சீவலப்பேரி ஆற்றுக்கு சென்று லாரியில் மணல் அள்ளினர். இவர்கள் அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் அள்ளியதாக கூறப்படுகிறது. மணல் அள்ளி விட்டு லாரி நேற்று அதிகாலை கங்கைகொண்டான் நோக்கி சென்று கொண்டு இருந்தது.

மணலுக்கு மேல் உய்க்காட்டான் உட்கார்ந்து இருந்தார். சீவலப்பேரி அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியில் சென்று கொண்டு இருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென்று கவிழ்ந்தது. இதில் மணலுக்குள் சிக்கிய உய்க்காட்டான் பரிதாபமாக இறந்தார். லாரி டிரைவர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீவலப்பேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மணலில் சிக்கி கிடந்த உய்க்காட்டானை போலீசார் மீட்டு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் மணல் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். மேலும் இந்த திருட்டு மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட லாரி யாருடையது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story