உத்தவ் தாக்கரேயுடன் தேவேந்திர பட்னாவிஸ் சந்திப்பு 24-ந் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்க முடிவு


உத்தவ் தாக்கரேயுடன் தேவேந்திர பட்னாவிஸ் சந்திப்பு 24-ந் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்க முடிவு
x
தினத்தந்தி 13 March 2019 11:13 PM GMT (Updated: 13 March 2019 11:13 PM GMT)

தேவேந்திர பட்னாவிஸ் மூத்த மந்திரிகளுடன் நேற்று முன்தினம் இரவு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் இல்லத்திற்கு சென்றார்.

மும்பை,

மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 11-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 4 கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பா.ஜனதாவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து முறையே 25, 23 தொகுதிகளை பங்கிட்டு போட்டியிடுகின்றன.

இந்த நிலையில் இரு கட்சிகளின் மாநில தலைவர்களும் கூட்டாக தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள வியூகங்களை வகுத்து வருகின்றனர். இரு கட்சிகளும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த விவகாரங்கள் தொடர்பாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மூத்த மந்திரிகளுடன் நேற்று முன்தினம் இரவு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் இல்லமான ‘மாதோ’க்கு சென்றார். அங்கு உத்தவ் தாக்கரேயுடன் நடந்த ஆலோசனையை தொடர்ந்து தேர்தல் பிரசார வியூகத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.

அதன்படி இருகட்சிகளில் உள்ள மாநில அளவிலான தலைவர்களை கொண்டு வருகிற 24-ந் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருப்பதாகவும், அன்றைய தினம் முதல் பிரசார கூட்டம் கோலாப்பூரில் நடக்க இருப்பதாகவும் பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த முதல் பிரசார பொதுக்கூட்டத்தை தொடங்கும் முன்பாக மும்பை, விதர்பா, மரத்வாடா மற்றும் வட மராட்டியம் மண்டலங்களில் தலா 3 முதல் 4 பொதுக்கூட்டங்களை அந்தந்த பகுதி கட்சியினர் நடத்த இருப்பதாகவும் சிவசேனா தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

Next Story